இன்று முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்..!!

Estimated read time 0 min read

டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில், “ டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் நுகர்வோர் ஆகிய இரு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் தூய்மையான, சுகாதாரமான மற்றும் சிறந்த பணிச்சூழலைப் பராமரிப்பதன் அவசியத்தையும் தற்போதைய தேவைகளையும் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகளுக்கு டாஸ்மாக் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, இதுவரை நடைமுறையில் இருந்த சிறு ரொக்கத் தொகை வசதிக்கு மாற்றாக, சில்லறை விற்பனைக் கடைகளைத் தினமும் சுத்தம் செய்தல் மற்றும் குடிநீர் மற்றும் பிற அடிப்படை வசதிகளை வழங்குதல் ஆகியவற்றிற்காக பின்வரும் விகிதங்களில் மாதாந்திரத் தொகையை வழங்குவதற்கு இதன் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது.

அந்த வகையில் மாநகராட்சி பகுதியில் உள்ள 842 கடைகளுக்கு ரூ.5,000, நகராட்சி / பேரூராட்சி பகுதியில் உள்ள 835 கடைகளுக்கு ரூ.4000, ஊரக / கிராம பஞ்சாயத்து பகுதிகளில் உள்ள 2,371 கடைகளுக்கு ரூ.3 ஆயிரம் என மொத்தம் 4,048 கடைகளுக்கு பராமரிப்பு தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகையைக் கொண்டு கடை, கவுண்டர், சுற்றுப்புறம் சுத்தம் செய்ய துடைப்பம், கிருமிநாசினி, பினாயில், குப்பை தொட்டி, பைகள் வாங்குதல், சுத்தம் செய்ய உள்ளூரில் ஒருவரை தினக்கூலி அடிப்படையில் நியமித்தல், வாட்டர் கேன் வாங்குதல், வாட்டர் டிஸ்பென்சர் / பானை வாடகை / பராமரிப்பு, குடிநீர் செலவிடுதல், பணியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு தேவையான இதர அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். எக்காரணம் கொண்டும் வாடகை, மின் கட்டணம், கட்டிட பழுது, பர்னிச்சர், உபகரணங்கள் அல்லது வேறு தனி நிதி ஒதுக்கீடு உள்ள எந்த செலவுக்கும் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொகையானது அக்டோபர் 2026 மாதத்திற்கான பராமரிப்புக் கட்டணமாக, செப்டம்பர் மாதத்திற்கான மேற்பார்வையாளரின் ஊதியத்துடன் விடுவிக்கப்படலாம். அதாவது ஒரு மாதத்திற்கான பணம் முன்கூட்டியே வரவு வைக்கப்படும். அத்தொகையைச் சரியாகப் பயன்படுத்துவதற்கும், அது தொடர்பான கணக்குகளைப் பராமரிப்பதற்கும் அவரே பொறுப்பாவார். ஒரு சில்லறை விற்பனைக் கடை ஒரு முழு மாதமும் மூடப்பட்டிருந்தால் அக்கடைக்கான தொகை எதுவும் பெறப்படக்கூடாது. அல்லது அனுமதிக்கப்பட்ட அத்தொகையை அடுத்த மாதத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இது கடை மேற்பார்வையாளர் அல்லது வேறு எந்தவொரு பணியாளரின் ஊதியத்தின் ஒரு பகுதியாக அமையாது. அல்லது படி, சலுகையாக என தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தக்கூடாது.

ஒரு சில்லறை விற்பனைக் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும்போதோ அல்லது அது அமைந்துள்ள பகுதி அரசாங்கத்தாலோ அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பாலோ மறுவகைப்பாடு செய்யப்படும்போதோ, அக்குறிப்பிட்ட கடைக்கான கட்டண விகிதத்தை மாற்றம் நிகழ்ந்த தேதியிலிருந்து திருத்தி அமைப்பதற்கு ஏதுவாக, மாவட்ட மேலாளர் அது குறித்த தகவலை உடனடியாகத் தலைமை அலுவலகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author