ஆத்திகமும் நாத்திகமும் ஓரிடத்தில்!

Estimated read time 1 min read

கண்ணதாசன் 100 – 2
கண்ணதாசனின் வாழ்வில் ஆத்திகமும் கலந்திருந்தது நாத்திகமும் கலந்திருந்தது.
எந்தெந்த கால கட்டத்தில் இதில், மேலே சொன்ன இரண்டு உணர்வுகளில் எதில் தீவிரப்பட்டிருந்தாரோ அப்படித்தான் தன்னுடைய கவிதைகளிலும், திரையிசைப் பாடல்களிலும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.
நாத்திகம் என்பது கம்பர் காலத்திலேயே பேசப்பட்ட ஒன்றாக இருந்திருக்கிறது என்பதை அவர் எழுதிய வாழ்த்துப்பா-வில் இடம்பெற்ற வரிகளில் எடுத்துக்காட்டி சமீபத்தில் சொல்லியிருந்தார் பேராசிரியரான அருணன்.

சித்தர் பாடல்களிலும் இதே நிலை எதிரொலித்திருக்கிறது.
1962-ம் ஆண்டில் வெளிவந்த ‘பார்த்தால் பசி தீரும்’ என்ற படத்தை இயக்கியவர் பிரபல இயக்குநரான பீம்சிங்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி, சாவித்திரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்த அந்தப் படத்தில் இடம்பெற்ற தத்துவச் சாயல் கொண்ட பாடலான “உள்ளம் என்பது ஆமை, அதில் உண்மை என்பது ஊமை” என்று துவங்கும் பாடலில், அடுத்து இடம்பெற்ற சரணத்தை இப்படி எளிமையான கவித்துவத்துடனும், தத்துவார்த்த ரீதியாகவும் எழுதியிருப்பார் கவியரசர் கண்ணதாசன்.
பாடல் வரிகளை வாசித்துப் பாருங்கள்…
தெய்வம் என்றால் அது தெய்வம்

அது சிலை என்றால் வெறும் சிலை தான்

உண்டென்றால் அது உண்டு

இல்லை என்றால் அது இல்லை.

இந்தப் பாடலில், நம்பிக்கையில் ஆத்திகம் இருக்கிறது; நம்பிக்கையின்மையில் நாத்திகம் இருக்கிறது என்பதை எவ்வளவு எளிமையான முறையில் பாமர மக்களுக்கும் சுலபமாகப் புரிகின்ற மொழி நடையில், கவியரசர் எழுதி, அதை பழம்பெரும் பாடகரான டி.எம்.சௌந்தரராஜன் அவருக்கே உரித்தான ஏற்ற இறக்கமான குரலில் பாடியிருப்பது கவியரசரின் பாடலை எங்கோ உயரத்திற்கு அழைத்துச் சென்று விடுகிறது.
– கா.ஜுபைதா,

திருவல்லிக்கேணி, சென்னை.

You May Also Like

More From Author