நடிகை ஷாலினி பாண்டேவைப் போன்ற தோற்றத்தில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அந்தக் காணொலி உண்மையானது அல்ல என்றும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியானது என்றும் ஷாலினி பாண்டே தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஆகஸ்ட் 31-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்த அவர், தன்னைப் போன்று தோன்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காணொலி முற்றிலும் போலியானது எனத் தெரிவித்துள்ளார். மேலும், பெண்களை குறிவைத்து தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவது மிகவும் கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பரவும் காணொலியில் இடம்பெற்றிருப்பது தாம் அல்ல எனத் தெரிவித்துள்ள ஷாலினி பாண்டே, இதுபோன்ற உள்ளடக்கங்களைப் பகிரவோ, பதிவிறக்கம் செய்யவோ, மற்றவர்களுக்கு அனுப்பவோ வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். மாறாக, இதுபோன்ற போலியான பதிவுகள் தென்பட்டால் அவற்றை சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களில் புகாரளிக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, ஷாலினி பாண்டேவின் மறுப்பும், காணொலியில் காணப்படும் தொழில்நுட்பத் தடயங்களும் அது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலிக் காணொலியாக இருக்கலாம் என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. எனவே, உறுதி செய்யப்படாத காணொலிகளை நம்பி பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தனிநபர்களின் கண்ணியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய போலி உள்ளடக்கங்களைப் பரப்பாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
