மீண்டும் உடையும் அபாயத்தில் பனிப்பாறைகள்! நேபாளத்திற்கு புதிய எச்சரிக்கை!

Estimated read time 1 min read

நேபாளத்தில் ஏற்பட்ட கோரமான பனிப்பாறைச் சரிவு மற்றும் திடீர் பெருவெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,127 ஆக உயர்ந்துள்ளது. பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள இந்தச் சூழலில், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக நேபாள அரசு 1 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளது. மேலும், அடையாளம் காண முடியாத உடல்களை அறிவியல் முறைப்படி கண்டறியும் பொருட்டு, 19 பேர் கொண்ட இந்தியப் தடயவியல் நிபுணர் குழு களத்தில் இறங்கி நேபாள அதிகாரிகளுடன் இணைந்து தீவிரப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இமயமலைப் பகுதியில் அதிகரித்து வரும் பனிப்பாறைப் பேரழிவுகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக, சீன எல்லையை ஒட்டியுள்ள சோச்சென் நதி (Chhochen River) பகுதியிலுள்ள பனிப்பாறைகள் மற்றும் பள்ளங்கள் மீண்டும் உடையும் அபாயத்தில் உள்ளதாகச் சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

போதே கோஷி (Bhotekoshi) மற்றும் திரிசூலி நதிப் படுகைகளில் ஏற்பட்ட இந்த விபத்தால் சுமார் 16 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 11,814 பேருக்கு மேல் மீட்கப்பட்டுள்ளனர். எனினும், இன்னும் சுமார் 4,000 பேர் வரை மாயமாகியுள்ளதால் அவர்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பெருவெள்ளம் காரணமாக நேபாளத்தின் நீர்மின் உற்பத்தித் திறனில் சுமார் 431 மெகாவாட் அளவிலான உள்கட்டமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

இதனிடையே, இந்தியா தனது மனிதாபிமான உதவிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் மற்றும் மருத்துவ உதவிகளுக்காக ஐந்தாவது விமானம் மூலம் 11 பேர் கொண்ட சிறப்பு மீட்புக் குழுவும், நவீன உபகரணங்கள் மற்றும் 5.5 டன் மருந்துப் பொருட்களும் நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை 163 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், உத்தரப் பிரதேசத்தின் கண்டக்ட் நதியில் மீட்கப்பட்ட 5 நேபாளப் பிரஜைகளின் உடல்கள் நேபாளக் காவல்துறையிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author