சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்: ஒரு ’ரீவைண்டிங்’!

Estimated read time 0 min read
தவெக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு மிகவும் எதிர்பார்ப்பு துவங்கியது.

பட்ஜெட் கூட்டத்தொடர் இதற்கு முன்பும் தமிழகத்தில் பலமுறை நடந்திருக்கிறது என்றாலும் தற்போது நிகழ்ந்த முக்கியமான வித்தியாசம் முழு சட்டமன்ற நிகழ்வும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதுதான்.
அதுவும் எந்தவிதமான தணிக்கையும் இன்றி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது தற்போதுதான் நடந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அரசியல் ஆர்வமுள்ள ஜென்ஸி கிட்ஸ் மட்டுமல்ல அரசியல் உணர்வுள்ள பெண்கள் உள்ளிட்ட பலரும் இந்த நேரலையை பார்த்திருக்கிறார்கள் என்பது தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்திராத ஒரு விஷயம்.
இந்த ஒரு நிகழ்வுக்காகவே நேரலைக்கு அனுமதி அளித்த தவெக அரசை பலரும் மனதாரப் பாராட்டுகிறார்கள்.
தவெக அரசு அடிக்கடி வலியுறுத்திய ஒரு வெளிப்படைத்தன்மைமிக்க நேரலை நடந்தேறி இருக்கிறது.
இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் அடிக்கடி தங்களது தரப்பிலான குறைகளை வெளிப்படுத்தினாலும், இறுதிவரை நேரலை ஒளிபரப்பப்படுவது நிறுத்தப்படவில்லை.
சட்டமன்றம் துவங்கியதிலிருந்தே சில கோடிக்கணக்கானவர்கள் பார்த்ததாக சொல்லப்படுகிற சட்டசபை நிகழ்வு எப்படித்தான் நடந்திருக்கிறது?
நேரலையாக ஒளிபரப்பப்படும் நிலையில், தவெக அமைச்சர்கள் பழுத்த அனுபவம் வாய்ந்த திமுகவினரிடமும் அதிமுகவினரிடமும் சிக்கித் திணறி போய்விடுவார்கள் என்றுதான் தொலைக்காட்சிகளில் பலதரப்பட்ட அரசியல் விஷயங்களை அலசி காயப்போடும் விவாதப் பேரறிஞர்கள் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், நிலைமை அப்படி இல்லை. சட்டமன்றம் துவங்கிய சில தினங்களுக்குள் பொதுப்பணித்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜுனா, லாட்டரி நிறுவனத்திடமிருந்து திமுக 900 கோடி ரூபாய் நன்கொடை வாங்கியது தொடர்பாக நேரடியாகவே எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலினிடம் கேட்டதும், அதற்கு இல்லை மறுக்காத திமுகவின் பதிலும் சமூக வலைத்தளங்களில் பெருமளவுக்கு வைரலானது.
இம்மாதிரி வைரல் ஏற்படுத்தக்கூடிய பல நிகழ்வுகள் இந்த சட்டமன்றத் தொடரில் தொடர்ந்து நடத்திருக்கின்றன.
திமுக தரப்பில் உதயநிதி ஸ்டாலின் இடையிடையே பேசி அதற்கு தகுந்த பதிலடி தவெக தரப்பில் கொடுக்கப்பட்டது.
இதற்கு முன்பு சட்டமன்றத்தில் துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்கள் செய்த வேலையை இந்த சட்டமன்றத் தொடரில் செய்தவர் திமுகவின் மூத்த முன்னாள் அமைச்சரான ஏ.வ.வேலு.
பலமுறை தவெகவை குறை சொல்லிப் பேசினாலும் சில சமயம் தவெக அமைச்சரை சகஜமாகப் பாராட்டி பேசினாலும்கூட பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடையும் சமயத்தில், “எங்க ஆட்சியில தவறு நடந்ததால் தானே மக்கள் எங்களை எதிர்க்கட்சி வரிசையில் உட்கார வைத்திருக்கிறார்கள்” என்று சொன்னது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சமூக வலைத்தளங்களில் பெருமளவுக்கு வைரலானது.
அதைப்போலவே தேமுதிக பொதுச்செயலாளரான பிரேமலாதா விஜயகாந்த் சட்டமன்ற மரபு பற்றி பேசியதும், அவருடைய கணவரான விஜயகாந்த் இதே சட்டசபையில் நாக்கைத் துருத்திப் பேசி எச்சரித்ததை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அதிரடி வேலையைச் செய்தார்கள்.
இப்படி சட்டமன்றத்தில் நடந்த ஒவ்வொரு நிகழ்வும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு, அது சமூக வலைத்தளங்கள் மூலமாக பெருமளவிற்கு கைபேசி வழியாகவும் மக்களைப் போய் சேர்ந்து தகுந்த எதிர்விளைவை உருவாக்கியதெல்லாம் தற்போதுதான் முதல் முறையாக நடந்தேறி இருக்கிறது.
அறநிலையத்துறையில் நடந்த முறைகேட்டைப் பற்றி வெளிப்படையாக குற்றம் சாட்டிய திமுகவினருக்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய தவெக அமைச்சர்கள், முந்தைய அரசின் பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தும் தகுந்த ஆதாரம் எங்களிடம் இருக்கிறது என்றும் அதை சபாநாயகரிடம் சமர்ப்பிப்போம் என்றும் பேசினார்கள்.
பொதுக்கூட்டங்களில் பேசுவது வேறு. சட்டமன்றத்தில் தங்களிடம் ஆதாரம் இருக்கிறது என்று சொல்லி பேசுவது வேறு.
இதையெல்லாம் விட முக்கியமான ஒரு விஷயம். சட்டமன்றத்தில் தங்களிடம் மிக முக்கியமான மூன்று ஃபைல்கள் இருக்கின்றன. அதைத் திறக்க வைத்து விடாதீர்கள் என்று சொல்லும் அளவுக்குச் சென்றார் தமிழக முதல்வரான விஜய்.
அதற்கு, “தைரியம் இருந்தால் அந்த பைல்களை திறந்து நடவடிக்கை எடுங்கள்” என்று எதிர் சவால் விட்டார் உதயநிதி ஸ்டாலின்.
இப்படி பலதரப்பட்ட நேரடியான பலவிதமான மோதல்கள் இந்த சட்டமன்றத் தொடரில் அரங்கேறி இருக்கின்றன.
இதை கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த கோடிக்கணக்கான வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் எப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள்?,
எப்படி எல்லாம் கையைத் தூக்கி ஆவேசமாக ஒருமையில் பேசுகிறார்கள்?, சிலர் அடிக்கப் பாய்ந்து வருகிறார்கள் என்பதை எல்லாம் நேரடியாகப் பார்க்க முடிந்திருக்கிறது.
தாங்கள் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் எப்படிப்பட்டவர்களாக சட்டசபையில் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை வாக்காளர்களே எடை போடக்கூடிய அளவுக்கு ஒரு சூழலை சட்டசபை நேரலை ஒளிபரப்பு உருவாக்கித் தந்திருக்கிறது.

***
இதனிடையே, சட்டசபையில் சமூக நீதித்துறை சார்ந்த ஒரு கோரிக்கையின்போது, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரான வன்னியரசு முதல் நாள் பேச முயற்சித்தபோது, எதிர் தரப்பில் பெரும் கூச்சல் எழுந்தது.
அவர் பேசவிடாமல் தடுக்கப்பட்டதெல்லாம் சட்டசபை நிகழ்வில் நடந்த ஒரு கரும்புள்ளி.
ஆனால், அதற்கு மறுநாள் தான் மட்டுமல்ல தான் சார்ந்த சமூகத்தினருக்கு ஏற்பட்ட வெவ்வேறு விதமான சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றி பேசி அதற்கான குறைந்தசபட்சமாக சாத்தியப்பட்ட சில நடைமுறைகளை அறிவித்ததற்காகவும் சமூகநீதி அமைச்சரான வன்னியரசு அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பரவலான பாராட்டுக்கள் போய் சேர்ந்திருக்கிறது.

***
நடந்து கொண்டிருக்கும் சட்டமன்றத் தொடரில் சிலர் திரைப்படப் பாடல்களை தங்களால் முடிந்த அளவுக்கு பாட முயற்சித்திருக்கிறார்கள்.
சிலர் கடுமையான சொற்களை பேசி அவைக்குறிப்பில் இடம் பெறாத அளவுக்கு பேசியிருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு காரசாரமான வாதங்களும் நடந்தேறியிருக்கின்றன. ஆனால், இதையெல்லாம் மிகவும் பொறுமையாக கையாண்ட பெருமை எல்லாம் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் அவர்களைதான் சேரும்.
இந்த சட்டமன்றத் தொடரில் மட்டும் குறைந்தபட்சம் பல நூறு முறைகளுக்கு மேல் “உட்காருங்க” என்று சொல்லியிருக்கிற ஜேசிடி பிரபாகரன், “ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சட்டசபை நிகழ்வுகள் போவதைப் பார்த்து இதற்கு மேல் போனால் நான் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள்” என்று எச்சரிக்கவும் செய்தார்.
அவர் அவையை நிதானமாக கையாண்ட விதம் சமூக வலைத்தளங்களில் பெருவாரியான பாராட்டுக்களை இதுவரை எந்த சபாநாயகருக்கும் இல்லாத அளவுக்கு பெற்றுத் தந்திருப்பது என்பது ஜேசிடி பிரபாகரன் அவர்களுக்கே உரித்தான தனிச்சிறப்பு.

***
இன்னும் ஒரே ஒரு நிகழ்வுதான் நிகழ வேண்டி இருக்கிறது. சட்டசபையில் இதுவரை எழுப்பப்பட்ட பல்வேறு மானியக் கோரிக்கை தொடர்பான விவாதங்களுக்கு தமிழக முதல்வர் தரப்பிலான பதிலுரை ஒன்றுதான் இனிமேல் வெளிவர வேண்டும்.
சமீபத்தில்தான் சட்டமன்றத்தில் எழுப்பப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்குமான பதிலை என்னுடைய பதிலுரையில் நான் தெரிவிப்பேன் என்று அறிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார் முதல்வர் விஜய்.
முதல்வர் விஜய் எந்த விதத்தில் பதிலளிக்கப் போகிறார்? என்பதை தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல தமிழகத்தில் அவருக்கு வாக்களித்த கோடிக்கணக்கான வாக்காளர்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
ஒன்றை மட்டும் நிறைவாகச் சொல்ல வேண்டும். இந்த அளவுக்கு தமிழக சட்டமன்ற நிகழ்வு வெளிப்படையாக இதுவரை ஆண்ட எந்த அரசும் செய்யாத நிலையில், தவெக அரசு செய்திருப்பதை காலச்சூழலுக்கு ஏற்ற ஒரு நவீன மாறுதலாக கண்டிப்பாகச் சொல்லலாம்.

– லியோ

You May Also Like

More From Author