சீன எல்லையில் ஏற்பட்ட மிக மோசமான பனிப்பாறை வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து, அங்குள்ள பேரிடர் Early-warning system என்ற முன்னெச்சரிக்கை அமைப்பை அவசரமாக மீண்டும் சீரமைக்க நேபாள அரசு திட்டமிட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி இமயமலைப் பகுதியில் நிகழ்ந்த பனிப்பாறை சரிவினால் நேபாள சீன எல்லையில் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் சிக்கி நேபாளம் மற்றும் சீனாவில் 1,100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந்தச் சூழலில், பாதிப்புகள் தொடர்வதைத் தடுக்கவும், நதியோரங்களில் குடியிருக்கும் மக்களைப் பாதுகாக்கவும் நேபாளத்தின் தேசிய பேரிடர் இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை ஆணையம் அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சீன எல்லையையொட்டிய நேபாளத்தின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் உள்ள ‘திமுரே’ (Timure) பகுதியில் அதிநவீன கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்படவுள்ளன.
நில அதிர்வுகளை முன்கூட்டியே கண்டறியும் சென்சார்கள் மற்றும் நிலச்சரிவுகளைக் கண்காணிக்க ரிமோட் கேமராக்கள் அமைக்கப்பட உள்ளன.
இயற்கைப் பேரிடர் காலங்களில் மொபைல் நெட்வொர்க்குகள் செயலிழந்தாலும், தடையற்ற தகவல் பரிமாற்றத்திற்காக விசாட் (VSAT) செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் வகையில் நெட்வொர்க் சீரமைக்கப்படவுள்ளன.
தற்போதைய பெருவெள்ளத்திற்குப் பின் மலைப்பகுதிகளின் நிலப்பரப்பு சீரற்று காணப்படுவதால், மேலும் பல கடுமையான நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுனர்களும் அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.
புதிய முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு செயல்பட்டால், அடுத்தடுத்து நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படும் போது, ஆற்றுப் படுகைகளில் வசிக்கும் மக்களுக்குப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல சில நிமிடங்களாவது அவகாசம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக லெண்டே மற்றும் போட் கோசி நதிப் பகுதிகளில் ஏற்பட்ட ஒரு பெரிய பனிப்பாறை சரிவினால், சேறு, நீர் மற்றும் இடிபாடுகளின் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதைத் தொடர்ந்து, நான்கு நீரியல் கண்காணிப்பு நிலையங்கள் அழிக்கப்பட்டதால், அவை சரியான நேரத்தில் முன் எச்சரிக்கைகளை வழங்க முடியாமல் போயின என்று கூறப் படுகிறது.
திடீர் பனிப்பாறை சரிவினால் ஏற்பட்ட வெள்ளத்தின் வேகம் மற்றும் அளவு குறித்து போதுமான எச்சரிக்கைகளை வழங்க முடியாத அளவுக்கு ஏற்கனவே இருந்த கண்காணிப்பு நெட்வொர்க் செயலிழந்ததால் இறுதியில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு அவசரகால எச்சரிக்கை குறுஞ்செய்திகளை அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
தொடக்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட 38 நிமிடங்களுக்குப் பிறகே இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக அமைக்கப் பட்டுள்ள புதிய கண்காணிப்பு நெட்வொர்க் பெரும்பாலும் மழையினால் ஏற்படும் நதி மட்டங்களின் படிப்படியான உயர்வுகளைக் கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
முக்கியமாக வழக்கமான ஆற்று மட்ட அளவீடுகளைச் சார்ந்திருப்பதை விடுத்து, பல்வேறு வகையான அபாயங்களைக் கண்டறியும் திறன் கொண்ட ஒரு கண்காணிப்பு நெட்வொர்க்கை நேபாள அரசு உருவாக்கியுள்ளது.
இந்தப் பேரழிவு, நேபாளத்திற்கும் சீனாவிற்கும் இடையே வலுவான நிகழ்நேரத் தகவல் பகிர்வுக்கான கோரிக்கைகளையும் புதுப்பித்துள்ளது.
பல பனிப்பாறை அபாயங்கள் திபெத்தின் உயரமான பகுதிகளில் உருவாவதால் நேபாளத்தில் இமய மலை அடிவாரத்தில் உள்ள மக்களுக்குப் பனிப்பாறைகளின் நகர்வுகள், நீரோட்டத்தின் மேலுள்ள நீர் மட்டங்கள் மற்றும் அபாயகரமான தடுப்பு ஏரிகள் பற்றிய முன்னெச்சரிக்கை தகவல்கள் மிகவும் முக்கியமானதாகின்றன.
நடந்து முடிந்த பேரழிவைத் தொடர்ந்து செயற்கைக்கோள் படங்கள், நீரியல் தகவல்கள் மற்றும் நீரோட்டத்தின் மேலுள்ள தடுப்பு ஏரிகள் குறித்த சமீபத்திய தகவல்களை நேபாளத்துடன் சீனா பகிர்ந்துள்ளது.
ஒரு பெரும் இயற்கைப் பேரிடர் ஏற்பட்ட பிறகு கண்டறியப்பட்ட தகவல்களைப் பகிர்வது மட்டும் போதுமானதாக இருக்காது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
