டெல்லியில் சத்யா நிகேதன் என்ற இடத்தில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியானார்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் ஆறு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்தார். இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இடிபாடுகளில் சிக்கிய 6 பேரை மீட்ட மீட்புப்படையினர், அவர்களை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது. டெல்லி பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள இந்த பகுதியில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ளனர்.
இடிந்து விழுந்த கட்டிடம் 40-50 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதும், இது ஐந்து தளங்களை கொண்ட ஆண்களுக்கான பேயிங் கெஸ்ட் (PG) தங்குமிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.விபத்து நடந்தபோது கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவ இடத்தில் பணியாற்றும் தீயணைப்புக் குழுக்களுக்கு உதவுவதற்காக பேரிடர் மீட்புக் குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கட்டிடம் இடிந்து விழுந்தது கவலையாக உள்ளதாகவும், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.
