சிக்கிம் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேற்குப் பகுதியில் உள்ள ரிம்பி கிராமத்தில் திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவால் அப்பகுதியில் இருந்த பல வீடுகளும், மின்வாரியத் துறைக்குச் சொந்தமான அரசு குடியிருப்புகளும் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
தொடர் மழையின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் மண் சரிந்து விழுந்து போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று சேத மதிப்புகளைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சாலைகளில் தேங்கியுள்ள இடிபாடுகளை அகற்றும் பணிகளும், போக்குவரத்தைச் சீரமைக்கும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
#WATCH | Sikkim | A major landslide in the Rimbi area has left more than 30 houses affected. The incident was triggered by heavy mudslides and debris coming down from the upper slopes, sending large quantities of mud, rocks and other debris towards the lower areas
(Video source:… pic.twitter.com/5rhBlSoiTB
— ANI (@ANI) September 25, 2026
இயற்கைச் சீற்றம் அதிகமாக உள்ள பகுதிகளுக்குப் பொதுமக்கள் யாரும் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு அபாயம் அதிகம் உள்ளதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், ஆபத்தான சரிவுப் பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
