ரசிகர்களுக்குக் கடிதம் எழுத முடியாமல் தவிக்கும் அமிதாப் பச்சன்…!

Estimated read time 0 min read

பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன், தனக்கு அன்பளிப்புகள் மற்றும் வாழ்த்துகளை அனுப்பும் ரசிகர்களுக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி நன்றி தெரிவிக்க விரும்பியும், கையில் ஏற்பட்டுள்ள அசௌகரியம் காரணமாக அதைச் செய்ய முடியாமல் தவித்து வருகிறார். தீபாவளியை முன்னிட்டு தனது வலைப்பதிவில் வெளியிட்ட பதிவில் இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து ஏராளமான வாழ்த்துகளும் பரிசுகளும் கிடைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவற்றைச் சேமித்து வைப்பதற்கே தற்போது இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர்கள் அனுப்பிய அன்பளிப்புகளை முறையாகப் பாதுகாக்காமல் இருப்பது அவர்களின் அன்பை அவமதிப்பதற்குச் சமம் என்றும், ஒவ்வொருவரின் அன்புக்கும் உரிய நன்றியைத் தெரிவிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தனக்குப் பரிசுகள் அனுப்பிய ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதி பதிலளிக்க முயற்சி செய்து வருவதாகவும் அமிதாப் தெரிவித்துள்ளார். ஆனால், அந்தப் பதில்களைத் தானே கையால் எழுத வேண்டும் என்று விரும்பியபோதும், கையில் ஏற்பட்டுள்ள அசௌகரியம் காரணமாக வேகமாக எழுத முடியவில்லை என்றும், இதனால் பதிலளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கியுள்ளார்.

இதற்காக ரசிகர்களிடம் மனப்பூர்வமாக மன்னிப்பும் கேட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு ஓய்வு மற்றும் உடல்நல மீட்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், தற்போது கையில் ஏற்பட்டுள்ள அசௌகரியம் குறித்த இந்தப் பதிவு வெளியாகியுள்ளது. ரசிகர்களின் அன்புக்கு நேரில் கடிதம் மூலம் நன்றி தெரிவிக்க முடியாதது அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author