வைபவ் சூர்யவன்ஷியை நீக்கியது ஏன்? இந்திய அணி நிர்வாகத்திடம் ஆகாஷ் சோப்ரா கேள்வி!

Estimated read time 1 min read

டெல்லி : நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்பட்டது குறித்து, முன்னாள் இந்தியத் தொடக்க ஆட்டக்காரரான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனல் மூலம் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார். காயம் காரணமாக வெளியேறியிருந்த இஷன் கிஷன் முழு உடல் தகுதியுடன் அணிக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, அதற்கு முன்பு சிறப்பாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, அணியில் யாராவது காயமடைந்தால் மட்டுமே வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்குவீர்களா அல்லது வேறு வழியே இல்லாத சூழலில் மட்டும்தான் அவரை அணியில் சேர்ப்பீர்களா என்று அணி நிர்வாகத்தைக் கேள்வி எழுப்பியுள்ளார்.

முந்தைய போட்டியில் அபிஷேக் சர்மா சதம் விளாசியிருந்த போதிலும், வைபவ் சூர்யவன்ஷியும் தனது முந்தைய போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததைச் சோப்ரா சுட்டிக்காட்டியுள்ளார். இஷன் கிஷன் காயத்திலிருந்து திரும்பியபோது யார் வெளியேறுவார்கள் என்ற கேள்வி எழுந்ததாகவும், கோட்பாட்டு ரீதியாகப் பார்த்தால் கிசனுக்குப் பதிலாக வந்த வைபவ் சூர்யவன்ஷிதான் வெளியேற வேண்டும் என்பது நியதியாகத் தோன்றும் என்றாலும், இந்த போட்டித் தொடரின் முடிவை ஏற்கனவே இந்தியா தீர்மானித்துவிட்ட நிலையில் இந்த முடிவு விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது என்றார்.

மேலும், வைபவ் சூர்யவன்ஷிக்குத் தொடர்ந்து முறையான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றால், அவர் சர்வதேச அணியில் அமர்வதை விட உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும், குறிப்பாக முதல் தரப் போட்டிகளிலும் விளையாடுவதே அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியின் பங்கு மற்றும் அணியின் நீண்டகால எதிர்கால நோக்கம் என்ன என்பது குறித்து அணி நிர்வாகம் வெளிப்படையான ஒரு வழிவகைத் திட்டத்தை (Roadmap) வெளியிட வேண்டும் என்றும் சோப்ரா கோரிக்கை விடுத்துள்ளார். அணியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நிர்வாகத்திடம் தெளிவான சிந்தனை இருந்திருக்கலாம் என்றாலும், அது எதையும் பொதுவெளியில் தெளிவுபடுத்தாதது ஏமாற்றமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author