நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்..27 பேர் பலி!

Estimated read time 1 min read

நேபாளத்தில் கடந்த செப்டம்பர் 24 முதல் பெய்து வரும் இடைவிடாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல் போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி இதுவரை 27 பேர் பலியாகியுள்ளதாகவும், 8 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 4 பேர் மாயமாகியுள்ளதாகவும் அந்நாட்டுப் பிரதமர் அலுவலகம் மற்றும் உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.

நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, இந்த தொடர் மழையால் நாடு முழுவதும் 304 நிலச்சரிவு சம்பவங்கள் பதிவாகி 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 87 வெள்ளப் பெருக்கு சம்பவங்களில் 4 பேரும், கனமழை தொடர்புடைய விபத்துகளில் 3 பேரும் பலியாகியுள்ளனர். இந்த பேரிடரால் 1,082 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 114 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. தொடர் வெள்ளப்பெருக்கால் 227 வீடுகள் முழுமையாகவும், 142 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.மேலும் முக்கியப் போக்குவரத்துப் பாலங்கள் 31 தரைமட்டமாகியுள்ளன.

நேபாளத்தின் மனாங் மாவட்டத்தில் உள்ள மார்சியாங்தி ஆற்றில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆற்றுப் படுகை சில மணி நேரம் தற்காலிகமாகத் தடைபட்டது. மேலும், அதே மாவட்டத்தின் நார்பூ பகுதியில் அமைந்துள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள ஹிம்லுங் ஹிமால் சிகரத்தின் அடிவார முகாமில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சிக்கி மலையேற்ற வழிகாட்டிகள் உட்பட 22 பேர் மாயமாகியிருந்த நிலையில், அங்கிருந்து 4 பேரின் சடலங்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

கடந்த ஆகஸ்ட் 26-ஆம் தேதி நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 1,453 பேர் உயிரிழந்து 5,000-க்கும் மேற்பட்டோர் மாயமான கோரத் துயரத்திலிருந்து நாடு இன்னும் மீளாத சூழலில், இந்த புதிய பேரிடர் மேலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேபாளத்தில் பெய்து வரும் இந்த மிரட்டலான கனமழையின் நேரடித் தாக்கமாக, அண்டை மாநிலமான பீகாரில் பாயும் கண்டக் ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்கு சாமரன் மாவட்டத்தில் உள்ள பகாஹா பகுதியில் கண்டக் ஆற்றின் நீர்மட்டம் 91.25 மீட்டராக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

வால்மீகிநகர் தடுப்பணையிலிருந்து வினாடிக்கு 5.43 லட்சம் கனஅடிக்கு மேல் உபரி நீர் திறந்து விடப்பட்டதால், காரத்வா மற்றும் புலியாக்காட் ஆகிய பகுதிகளில் உள்ள கரைகள் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனைச் சரிசெய்யும் வகையில் நான்கு மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டு, ஆற்றங்கரையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

You May Also Like

More From Author