தியாகிகள் தினத்தை நினைவுகூரும் வகையில், தேசிய வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செப்டம்பர் 30ஆம் நாள் முற்பகல் தியன்ஆன்மென் சதுக்கத்தில் விமரிசையாக நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டுத் தலைவர்களான ஷி ச்சின்பிங், லீ ச்சியாங், சாவ் லேஜி, வாங் ஹுநிங், சாய் ச்சீ, டிங் சுயேசியாங், லீ சி, ஹான் ஜெங் ஆகியோர், பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து இதில் கலந்து கொண்டனர்.
மறைந்த தேசிய வீரர்களுக்கு மலர் கூடைகளை வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 10 மணிக்கு தொடங்கியது. அனைவரும் சீனத் தேசிய கீதத்தைக் கூட்டாகப் பாடினர். இதனைத் தொடர்ந்து, சீன மக்களின் விடுதலை லட்சியத்துக்கும் சீன மக்கள் குடியரசின் கட்டுமான லட்சியத்துக்கும் துணிச்சலுடன் தியாகம் செய்த வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.
மௌன அஞ்சலிக்குப் பிறகு 9 மலர் கூடைகள் மக்கள் வீரர் நினைவுச் சின்னத்திற்கு முன் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து ஷி ச்சின்பிங் உள்ளிட்ட கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் இந்நினைவுச் சின்னத்தை சுற்றி நடந்து மரியாதையுடன் பார்வையிட்டனர்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டு இவ்வாண்டுடன் 105 ஆண்டுகள் நிறைவடைவதோடு, செம்படையின் நீண்டப் பயணம் வெற்றி பெற்றதன் 90ஆம் ஆண்டு நிறைவாகவும் இருக்கிறது. புதிய யுகத்தின் பயணத்தில், ஷி ச்சின்பிங்கை மையமாக கொண்ட கட்சி மத்திய கமிட்டியின் வலிமைமிக்க தலைமையின் கீழ், நாட்டின் பல்வேறு இன மக்கள் ஒன்றுபட்டு, தேசத்தின் மறுமலர்ச்சிக்காக விடா முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றனர்.
