தமிழகத்தில் இன்று முதல் கனிமவள கடத்தலுக்கு செக் வைத்த தமிழக அரசு!

Estimated read time 1 min read

தமிழகத்தில் இயற்கை வளங்களான ஜல்லி, எம்-சாண்ட், மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதை முற்றிலுமாகத் தடுக்கும் நோக்கில், தமிழக அரசு மற்றும் புவியியல்-சுரங்கத்துறை இணைந்து மிகக் கடுமையான கட்டுப்பாட்டை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளன. அதன்படி, கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் அனைத்துக் கனரக லாரிகளிலும் ‘AIS-140’ தரத்திலான ஜி.பி.எஸ். (GPS) கருவி பொருத்தப்பட வேண்டும் என்றும், அதற்கான காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது என்றும் ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்டக் கெடு முடிந்ததையடுத்து, ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்படாத லாரிகளில் ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட எந்தவொரு கனிமப் பொருட்களையும் ஏற்றிச் செல்வதற்கு இன்று முதல் அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத குவாரிகளைக் கட்டுப்படுத்தவும், அனுமதியின்றி கனிமங்களைக் கள்ளத்தனமாகக் கொண்டு செல்வதைத் தடுக்கவும் இயற்கை வளங்கள் துறை சார்பில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறையின்படி, ஜி.பி.எஸ். கருவி பொருத்தாத லாரிகளுக்கான போக்குவரத்து அனுமதிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே உடனடியாக ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் தீவிர கண்காணிப்புப் பணிகள் முடுக்கப்பட்டு, ஜி.பி.எஸ். கருவி இல்லாத லாரிகள் கனிமங்களை ஏற்றி வர முடியாதபடி அதிகாரிகள் கடுமையான சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் இந்த அதிரடி உத்தரவு, கனிமவளக் கடத்தல் மாஃபியாக்களுக்கு மிகப்பெரிய நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author