இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் நடிகை லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி, திரையரங்குகளில் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘பத்தா’. இப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்த வெற்றி விழாவில், நடிகை லிஜோமோல் ஜோஸ் கலந்துகொண்டு விஜய் சேதுபதி மற்றும் படத்தைப் பற்றிப் பல சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
விழாவில் பேசிய நடிகை லிஜோமோல், “‘பத்தா’ திரைப்படத்தை மக்கள் கொண்டாடுவதையும், படத்தைப் பற்றிப் பேசுவதையும் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இயக்குநர் பாலாஜி சார் படப்பிடிப்பு முதல் டப்பிங் வரை மிகவும் பொறுமையாக எனக்கு அனைத்தையும் கற்றுக்கொடுத்தார். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து விஜய் சேதுபதி குறித்துப் பேசிய அவர், “விஜய் சேதுபதி சாரைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு பயமாக இருக்கும்! அவருடைய நடிப்பு திறமையும் அந்த மேஜிக்கும் மிக அருகில் இருந்து பார்க்க முடிந்த அனுபவம் மிகச் சிறந்தது. குறிப்பாக, உடன் நடிக்கும் மற்ற நடிகர்கள் சிறப்பாக நடிப்பதற்காக அவர் கொடுக்கும் இடத்தை (Space) பார்த்து மிகவும் வியந்தேன்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். விஜய் சேதுபதி குறித்து நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் சினிமா ரசிகர்களால் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
