உள்துறை செயலாளராக இருந்த மணிவாசன் நில நிர்வாக ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதில், உள்துறை செயலாளராக இருந்த மணிவாசன் நில நிர்வாக ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், சிறுதொழில் மேலாண் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த கார்த்திக், உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய நிர்வாக இயக்குநர் அருண் ராய், நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், நிதித்துறை செலவினங்கள் பிரிவு செயலாளர் வெங்கடேஷ், வேளாண் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நிலநிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, மின்வாரிய நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், மின் உற்பத்திக் கழக தலைவராகவும் ராஜேஷ் லக்கானி செயல்படுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா தாம்பரம் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சியின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநரான சிவகிருஷ்ண மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், தேனி ஆட்சியர் வைத்தியநாதன், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
