இந்தியாவிடம் தொடர்ந்து 4 முறை தோல்வி..  

Estimated read time 1 min read

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரிக்கும். அந்த வகையில், 2026-ஆம் ஆண்டில் இதுவரை இரு அணிகளும் 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 4 போட்டிகளில் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் அணி வெற்றி கண்டுள்ளது. இந்நிலையில், ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பைத் தொடரில் இரு அணிகளும் மீண்டும் மோத உள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸ் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் முதன்முறையாக மோதின. இதில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. அந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதையடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்திலும் இந்திய அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றது. பின்னர் ஏசிசி ஆண்கள் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பைத் தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த ஆண்டில் இந்தியாவுக்கு எதிரான தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஆனால், அதே தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்றது. பரபரப்பாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது.

இந்நிலையில், ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பைத் தொடரில் இன்று மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. 50 ஓவர் போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்குப் போட்டி தொடங்கும் என்றும், 3 மணிக்கு டாஸ் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்துக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான இந்த ஆட்டத்திலும் வென்று அரையிறுதி வாய்ப்பை நெருங்கும் முனைப்பில் களமிறங்குகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author