போரை நிறுத்த வேண்டும் என்ற விருப்பத்தைக் கம்போடியாவும் தாய்லாந்தும் தெரிவித்த போதிலும், இரு நாடுகளின் எல்லைப் பிரதேசத்தில் துப்பாக்கிச் சண்டைகள் தொடர்கின்றன. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 27ஆம் நாள் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், கம்போடியாவும் தாய்லாந்தும் அண்டை நாடுகளாகும். அதோடு, இரண்டும் சீனாவின் நட்புறவு நாடுகளாக உள்ளன. பரஸ்பரம் நம்பிக்கை தரும் நேசத்துடன் கூடிய சுமுகமான அண்டை நாட்டுறவை வளர்த்து, கருத்து வேற்றுமைகளை உரிய முறையில் கையாள்வது இரு நாடுகளின் அடிப்படை மற்றும் நெடுநோக்கு நலன்களுக்குப் பொருந்தியது என்று தெரிவித்தார். மேலும், மோதலில் ஏற்பட்ட உயிர் இழப்பை எண்ணி சீனா ஆழ்ந்த மனவருத்தம் கொள்வதாகத் தெரிவித்த அவர், இப்பிரதேசத்தின் அமைதியைக் கூடிய விரைவில் மீட்க வேண்டும் என்று விரும்புவதாகவும், இணக்க முயற்சியில் சீனா ஆக்கப்பூர்வப் பங்காற்றும் என்றும் குறிப்பிட்டார்.