வரலாற்று நகரமான அயோத்தியின் இராம ஜென்ம பூமியில் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டையின் சகாப்த தினத்தை முன்னிட்டு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டிருக்கும் இராமர் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவை வெகு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை செய்தார். நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரேத மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் பங்கேற்று சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர்.
விழாவில், முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களும், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரை பிரபலங்களும், சச்சின் தெண்டுல்கர், அஜய் ஜடேஜா உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களும், அரசியல் கட்சிகளின் தலைவரும் கலந்து கொண்டு ஸ்ரீராமரை தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், அயோத்தி இராம ஜென்ம பூமியில் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அப்பதிவில், “தேசத்தின் பெருமையை மீண்டும் எழுப்புவதைக் குறிக்கும் ஒரு கொண்டாட்ட தருணத்தைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 11 நாட்கள் கடுமையான அனுஷ்டானத்திற்குப் பிறகு, அயோத்தியில் இராம் லல்லாவின் கும்பாபிஷேக விழாவை வழிநடத்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
ஜனவரி 22, நாகரீகப் பாதையில் தெய்வீகத்துடன் ஒரு முயற்சியின் தருணமாக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், பிரபு ஸ்ரீராமின் நேர்மை, மன்னிப்பு, துணிச்சல், பணிவு, அக்கறை, கருணை ஆகிய பண்புகளை வாழ்வின் ஒரு வழியாகப் புகுத்துவதற்கு நாட்டு மக்கள் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.