செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுரத்தனமான வளர்ச்சி உலகளவில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் அதே வேளையில், அது சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தப் போகும் ஆபத்துகள் குறித்த பகீர் தகவல்களும் வெளிவரத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏஐ தரவு மையங்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதால், அங்குள்ள காற்றின் தரம் அடுத்த 5 ஆண்டுகளில் மிகக் மோசமான நிலையை அடையும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தத் தரவு மையங்களின் பிரம்மாண்டமான செயல்பாடுகள் மற்றும் ஆற்றல் தேவைகள் காரணமாக, வளிமண்டலத்தில் நைட்ரஜன் ஆக்சைடு உமிழ்வு சுமார் 136 சதவீதம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நச்சு வாயுவான கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு 90 சதவீதம் வரை உயரும் அபாயம் இருப்பதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. காற்று மாசுவின் இந்த அதிரடி உயர்வு அப்பகுதி மக்களின் சுகாதாரத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த சுற்றுப்புறச்சூழலையும் கடுமையாகப் பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.
தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக நிறுவப்படும் ஏஐ டேட்டா சென்டர்கள், மறுபுறம் புவி வெப்பமயமாதல் மற்றும் காற்று மாசுபாட்டைத் தீவிரப்படுத்துவது சர்வதேச அளவில் பெரும் கவலையை உருவாக்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வேளையில், பசுமை ஆற்றல் மற்றும் சூழலியல் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிக்கை தற்போது தொழில்நுட்ப உலகிலும் சமூக வலைதளங்களிலும் மிக வேகமாகப் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
