விஞ்ஞானிகளை ஷாக் ஆக்கிய உண்மை: சாகா வரம் பெற்ற ஜெல்லிமீன்’

Estimated read time 1 min read

இயற்கையின் விசித்திரமான படைப்புகளில் ஒன்றான ‘டுரிடோப்சிஸ் டோர்னி’ (Turritopsis dohrnii) என்ற சிறிய கடல் ஜெல்லிமீன், தனக்கு ஆபத்து அல்லது முதுமை வரும்போது தன் வயதைக் பின்னோக்கி நகர்த்தி மீண்டும் இளமையாகும் அபார ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆபத்தான சூழ்நிலைகளில் இது ஒரு செல் திரளாக மாறி, பின்னர் ‘பாலிப்’ என்ற ஆரம்ப கால வாழ்க்கைக் கட்டத்திற்குச் சென்று, அதிலிருந்து நூற்றுக்கணக்கான புதிய ஜெல்லிமீன்களை உருவாக்குகிறது.

அறிவியலாளர்கள் இதனைச் சுடவைத்தாலும், பட்டினி போட்டாலும், உவர் நீரில் போட்டாலும் இது சாகாமல் மீண்டும் மீண்டும் உயிர்வாழ்வதால் இதற்கு ‘சாகா வரம் பெற்ற ஜெல்லிமீன்’ என்று பெயரிட்டுள்ளனர்.

மனிதர்களின் வயதான செல்களை மீண்டும் இளமையாக்கவும், உடலின் திசுக்களைப் புதுப்பிக்கவும் இந்த ஜெல்லிமீனின் மரபணு ரகசியங்களை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். மனிதர்களை மீண்டும் குழந்தைகளாக மாற்றுவது இதனோட நோக்கமல்ல; மாறாக, பக்கவாதம், மாரடைப்பு, அல்சைமர் போன்ற நோய்களால் சேதமடைந்த மனித உறுப்புகளையும் திசுக்களையும் விரைவாகக் குணப்படுத்த இதைப் பயன்படுத்த திட்டமிடுகின்றனர்.

ஜெல்லிமீனில் நடப்பது போன்ற செல் மாற்றங்களை மனித செல்களிலும் தூண்ட முடிந்தால், மருத்துவ உலகில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்..ஜெல்லிமீனின் இந்தச் சாகசத்திற்கு அதன் உடலில் உள்ள சிறப்பு மரபணுக்களே காரணம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பிற உயிரினங்களை விட இந்த ஜெல்லிமீனின் டி.என்.ஏ-வில் உடலின் செல்களைப் பழுதுபார்க்கும் மரபணுக்கள் அதிகளவில் உள்ளன.

மேலும், வயது முதிர்வடையும் போது டி.என்.ஏ சேதமடைவதைத் தடுக்கும் ‘டீலோமியர்’ என்ற அமைப்பைப் பாதுகாக்கும் புரதங்களும் இதில் அதிகமாக உற்பத்தியாகின்றன. இதனாலேயே, வயது முதிர்ந்த செல்கள் மீண்டும் ஸ்டெம் செல்களாக மாறி புதிய வடிவத்தை எடுக்கும் ‘டிரான்ஸ்டிஃப்ரென்சியேஷன்’ என்ற விசித்திர நிகழ்வு இதில் சாத்தியமாகிறது.

இருப்பினும், ஆய்வகங்களில் இந்த ஜெல்லிமீன்களை நீண்ட காலம் பராமரிப்பது மிகவும் கடினமாக உள்ளது. ‘சாகா வரம் பெற்ற உயிரினம்’ என்று அழைக்கப்பட்டாலும், கடலில் நிலவும் உணவுப் பற்றாக்குறை, வேட்டை உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களால் இவை இயற்கையாக இறக்கவும் செய்கின்றன.

எனவே, ‘சாகா வரம்’ என்பது தியரி அளவில் உண்மையென்றாலும், இயற்கையில் இந்த ஜெல்லிமீன்களும் மிகவும் மென்மையான மற்றும் ஆபத்திற்கு ஆளாகக்கூடிய உயிரினங்களாகவே வாழ்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தச் சிறிய ஜெல்லிமீனின் ரகசியங்களைக் கண்டறிவதன் மூலம், மனித உடலின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் நீட்டிக்கும் புதிய சிகிச்சை முறைகளைக் கண்டறிய முடியும் என சர்வதேச விஞ்ஞானிகள் குழு நம்புகிறது. வயதான நோயாளிகளின் பார்வை இழப்பைச் சரிசெய்வது முதல் காயங்களை விரைவாகக் குணப்படுத்துவது வரை, இயற்கையின் இந்த ஒரு சிறிய படைப்பு மனித மருத்துவத்தின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கும் சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author