தமிழகத்தில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகையான மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலை 10 ரூபாய் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மதுபானங்களுக்கு 10 ரூபாய் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலக் கட்டணம் விதிக்கப்படுகிறது என்றும், அனைத்து வகையான மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலை நாளை மறுநாள் முதல் 10 ரூபாய் உயர்த்தப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கிடங்குகளில் இருந்து எப்.எல்.2 உரிமம் பெற்ற மதுக்கூடங்களுக்கு வழங்கப்படும் மதுபானங்களின் விலையும், சில்லறை விற்பனைக் கடைகளின் விலைக்கு இணையாக உயர்த்தப்படுகிறது என்றும், திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை எனக் குறிப்பிட்டு பாட்டில்களின் விலைச் சீட்டுகளில் மதுபான உற்பத்தியாளர்கள் அச்சிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உற்பத்தி ஆலைகள், டாஸ்மாக் மொத்த விற்பனைக் கிடங்குகள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் இருப்பில் உள்ள மதுபாட்டில்களிலும் திருத்தப்பட்ட விலைச் சீட்டுகளை ஒட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 1-ந்தேதி முதல் விநியோகிக்கப்படும் அனைத்து மதுபானங்களிலும் திருத்தப்பட்ட விலைச் சீட்டுகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும்,
உற்பத்தியாளர்களும், விநியோகஸ்தர்களும் விலையை உறுதி செய்து, உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
