தமிழ்நாட்டில் அரசுப் பணிகளுக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களுக்குப் மிகப்பெரிய நற்செய்தியைத் தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் அதிரடியாக அறிவித்துள்ளார். அரசுத் தேர்வுகளில் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படும் அனைத்துப் பணியிடங்களுக்கும், தற்போதைய விதிமுறைகளில் உள்ள வயது உச்சவரம்பை மேலும் 5 ஆண்டுகள் உயர்த்தித் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வை பொதுப் பிரிவினர் இதுவரை 32 வயது வரை மட்டுமே எழுத முடிந்தது என்ற நிலை மாற்றப்பட்டு, இனி 37 வயது வரை எழுதலாம் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இந்த 5 ஆண்டுகள் வயது வரம்பு உயர்வால், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள வயதுச் சலுகைகளும் அதற்கேற்ப தொடர்ந்து பொருந்தும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு காரணங்களால் போட்டித் தேர்வுகள் உரிய நேரத்தில் நடைபெறாததாலும், பல தேர்வர்கள் வயது வரம்பைக் கடந்துவிட்டதாலும், வயது வரம்பில் தளர்வு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். தேர்வர்களின் நியாயமான இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அதிரடி அறிவிப்பிற்குப் போட்டித் தேர்வர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் கிடைத்துள்ளது.
