இந்திய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் கிளென் பிலிப்ஸ் பேட்டிங்கில் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்தியப் பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்த அவர், இந்தத் தொடர் முழுவதும் 341 ரன்கள் குவித்து, இருதரப்பு டி20 தொடர் ஒன்றில் அதிக ரன்கள் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக 2023-ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் 331 ரன்கள் குவித்த இங்கிலாந்தின் பில் சால்ட் மற்றும் 2022-இல் இங்கிலாந்துக்கு எதிராக 316 ரன்கள் அடித்த பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் ஆகியோரின் சாதனைகளை கிளென் பிலிப்ஸ் இதன் மூலம் முறியடித்துள்ளார். இந்தச் சாதனையின் மூலம் இருதரப்பு டி20 தொடர்களில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கிளென் பிலிப்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் சேர்த்தது. 192 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கித் துரத்திய நியூசிலாந்து அணிக்கு டிம் சீஃபெர்ட் (93 ரன்கள்) மற்றும் கிளென் பிலிப்ஸ் (38 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 65 ரன்கள்) ஆகியோரின் அபாரமான ஆட்டம் வெற்றியை எளிதாக்கியது. இதனால் நியூசிலாந்து அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தத் தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கிளென் பிலிப்ஸ் ‘தொடர்நாயகன்’ விருதை வென்றார். தொடக்கப் போட்டிகளில் பின்னடைவைச் சந்தித்தாலும், நியூசிலாந்து அணி அடுத்தடுத்து மீண்டு வந்து டி20 தொடரைக் கைப்பற்றியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இத்தொடா் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளன.
