சீனாவில் உறவினர்கள் அதிகம் இல்லாததால் தனது திருமணத்தில் கலந்துகொள்ள ஆட்கள் இருக்க மாட்டார்களோ எனக் கவலைப்பட்ட இளைஞர் ஒருவர், சமூக வலைதளங்கள் மூலம் முன்பின் தெரியாத நபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரது அழைப்பு இணையவாசிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், எதிர்பாராத வகையில் பலரும் திருமணத்தில் கலந்துகொள்ள முன்வந்தனர். ஒரு சிறிய அழைப்பாகத் தொடங்கிய இந்த முயற்சி, மணமக்களின் வாழ்க்கையில் மறக்க முடியாத கொண்டாட்டமாக மாறியுள்ளது.
அந்த இளைஞரின் சிறுவயது வாழ்க்கை பல சவால்களைக் கொண்டதாக இருந்துள்ளது. அவர் தொடக்கப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே தந்தையை இழந்துள்ளார். பின்னர் தாயும் மறுமணம் செய்துகொண்டதால், அவரும் அவரது மூத்த சகோதரரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளனர். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் கடினமாக உழைத்த அந்த இளைஞர், தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்குப் பணத்தைச் சேமித்துள்ளார்.
It all started with a simple wish: An orphan from Yunnan Province invited strangers online to attend his upcoming wedding, hoping to feel the love and support of the family he never had.
But what happened next was beyond anything he could have imagined: Thousands of people from across the country showed up, bringing gifts and warm wishes, turning the wedding into a nationwide celebration of kindness and connection.
— Xie Feng 谢锋 (@AmbXieFeng) October 30, 2026
திருமண ஏற்பாடுகள் தொடங்கியபோதுதான், விழாவில் கலந்துகொள்ள அதிகமான உறவினர்கள் இல்லை என்ற கவலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது நிலைமையை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்ததுடன், நெட்டிசன்களும் தனது திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார். அவரது கதையைக் கேட்ட பலரும் அழைப்பை ஏற்றுக்கொண்டு திருமணத்துக்கு வருவதாகத் தெரிவித்தனர். சிலர், “நாங்கள் வருகிறோம்” என்று உற்சாகமாகப் பதிலளித்துள்ளனர்.
இதையடுத்து திருமண நாளில் பலரும் பரிசுகளுடன் வந்து மணமக்களை வாழ்த்தியுள்ளனர். திருமணத்துக்குத் தேவையான பொருள்கள், உணவு மற்றும் அலங்கார ஏற்பாடுகளுக்கும் உதவியுள்ளனர். சில சமையல் கலைஞர்கள் தாங்களாகவே முன்வந்து விருந்தினர்களுக்குச் சமைத்துக் கொடுத்துள்ளனர். மேலும், மணமக்களுக்கு ஆச்சரியமளிக்கும் வகையில் மேபேக் சொகுசு காரும் பரிசாக வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறவினர்கள் குறைவாக இருப்பார்கள் என்று கவலைப்பட்ட இளைஞரின் திருமணத்தை, முன்பின் தெரியாத பலரின் அன்பும் உதவியும் மறக்க முடியாத விழாவாக மாற்றியுள்ளது.
