“உலகிலேயே அதிக மோசடி நடக்கும் நாடு….!” இந்தியப் பெண்ணின் வேதனைப் பதிவு….!! 

Estimated read time 0 min read

எகிப்தின் பழமையான பிரமிடுகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களைப் பார்க்கச் சென்ற இந்தியப் பெண் ஒருவருக்கு, அங்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளன. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், எகிப்து நாட்டினை “உலகிலேயே அதிக ஏமாற்று வேலைகள் நடக்கும் நாடு” என்று குறிப்பிட்டுப் புலம்பியுள்ளார்.

எகிப்தில் உள்ள சுற்றுலாத் தலங்களைப் பார்ப்பதற்கு நுழைவுக் கட்டணம் செலுத்தினாலும், ஒவ்வொரு பிரமிடு அல்லது வரலாற்றுச் சின்னத்தின் உள்ளேயும் செல்ல தனித்தனியாக மீண்டும் பணம் வசூலிக்கப்படுவதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த முறை ஒரு உணவகத்தின் உணவுப் பட்டியலைப் போலப் பணத்தை உறிஞ்சுவதாக அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கெய்ரோ நகரைத் தவிர மற்ற இடங்களில் போக்குவரத்து வசதி மிகவும் மோசமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். செயலி வழியே புக் செய்யும் டாக்சிகளுக்கு 100 ரூபாய் கட்டணம் காட்டினால், ஓட்டுநர்கள் 1000 முதல் 1200 ரூபாய் வரை கேட்டு மிரட்டுவதாகவும், எங்கு சென்றாலும் ‘பக்ஷீஷ்’ என்ற பெயரில் டிப்ஸ் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து நடக்கும் இத்தகைய ஏமாற்று வேலைகள் மற்றும் திடீர் கூடுதல் செலவுகளால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண், எகிப்து பயணத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு உடனடியாக சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என நினைத்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தப் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் எகிப்து பயணம் குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சிலர் எகிப்து செல்லும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டதாகக் கூறினாலும், சிலர் முறையான திட்டம் இருந்தால் எகிப்தை ரசிக்க முடியும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author