புதுக்கோட்டை அடுத்த இச்சடியில் நடைபெற்ற அமமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “திருமாவளவன் திமுக கூட்டணியில் உள்ளார், அதனால் பாஜக கூட்டணி பலமாக இல்லை என கூறுகிறார். பலம் பொருந்திய தேசிய கூட்டனியான எங்கள் கூட்டணி திமுக கூட்டணியை வீழ்த்தும். மக்கள் விரோத திமுக ஆட்சியில் மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
கீழடியில் பல்வேறு தொன்மையான பொருட்கள் கிடைத்தாலும் அதன் காலம் உள்ளிட்டவைகளை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டும் அதை தான் மத்திய அமைச்சர் கூறியுள்ளார். இதில் எந்த தவறும் இல்லை, தேசிய ஜனநாயக கூட்டணி முழுமை பெற்று அந்த கூட்டணியில் உள்ளவர்கள் தன்னைப் பிரச்சாரத்திற்கு அழைக்கும் பட்சத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவராக 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வேன்.
எடப்பாடி பழனிச்சாமி 234 தொகுதிக்கும் பிரச்சாரத்திற்கு வருவாரா என்பதை அவர்தான் கூறவேண்டும். அமித்ஷா தொடர்ந்து 2024 அதற்கு முன்னர் நடந்த தேர்தலில் பிளவுபட்ட அதிமுகவை ஓரணியில் கொண்டு வர முயற்சி செய்தார். ஆனால் அது சாத்தியமாகவில்லை, ஆனால் 2026 தேர்தலில் ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் இணைக்கும் அமித்சாவின் முயற்சி வெற்றி அடைந்துள்ளது. அதனால் இந்த தேர்தலில் உறுதியான வெற்றியாக இருக்கும். தமிழ்க் கடவுள் முருகனுக்கு மாநாடு நடத்துவதில் தவறில்லை, தமிழ்நாட்டில் பாஜக இந்து அமைப்புக்கள் வளர்ந்துள்ளது. தேவை ஏற்படும் போது ஒரு மாநாடு நடைபெறும், தற்போது முருகன் மாநாடு நடத்துவதற்கு தேவை இருப்பதால் முருகன் மாநாடு நடைபெறுகிறது. ஒரு காலத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியே திருச்செந்தூருக்கு வேல் எடுத்துச் சென்றவர் தான். தமிழ்நாடு அரசே திருச்செந்தூரில் முருகன் மாநாடு நடத்தியது பிளவுபடுத்துவதற்காகவா? அது இல்லையென்றால் தற்போது நடைபெறும் முருகன் மாநாடு பிளவுபடுத்துவதற்கு இல்லை.
2026ம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டில் அமையப்போவது உறுதி கூட்டணி ஆட்சியாகவும், கூட்டணி அமைச்சரவையாகவும் தான் இருக்கும். அதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள வெற்றி பெற்ற கட்சிகள் அனைத்தும் இருக்கும். திமுகவை தோற்கடிக்க நினைக்கும் அனைத்து கட்சிகளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும், இணையாமல் தனித்து நின்றால் வாக்குகளை பிரிப்பதற்கு வேண்டுமானால் அது உபயோகமாக இருக்குமே தவிர திமுக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்படாது. எனவே தமிழக வெற்றிக்கழகம் மட்டுமல்ல, திமுகவை எதிர்க்கும் அனைத்து கட்சிகளும் ஓரணியில் என்டிஏ கூட்டணியில் இணைய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லிக்கு எப்போதுமே தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று கண்துடைப்புக்காக கூறுகிறார். உண்மையில் முதலமைச்சரின் குடும்பமே முதலமைச்சருக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் தான் உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றும் நண்பர்கள் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிச் சென்று ஒளிவது ஏன்? என்று கருத்துக்கு முதல்வர் பதில் கூற வேண்டும். ரத்திஷ் யார்? ஆகாஷ் பாஸ்கர்? யார் என்று விளக்க வேண்டும். இதனை மறைப்பதற்காக முதலமைச்சர் டெல்லிக்கு தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் என்று கூறுகிறார். அதேபோன்று திமுகவும் திமுக மந்திரிகளும் முதலமைச்சருக்கு அவுட் ஆப் கண்ட்ரோலில் தான் உள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சி பிரச்சனையில் பாஜக தலையிடுவதில் தவறு இல்லை. ஏனென்றால் 2024 தேர்தலில் பாஜகவோடு பாமக கூட்டணி வைத்தது. கூட்டணி கட்சி என்ற முறையில் இந்த கட்சியின் பிரச்சனையில் பாஜக தலையிடுவது தவறில்லை, தற்போது பாஜக தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் ஜெயலலிதாவால் அரசியலுக்கு கொண்டுவரப்பட்டவர். அதிமுகவில் அவருடைய நடவடிக்கை சிறந்து இருந்தது. இந்த நிலையில் அவர் பாஜகவிற்கு செல்லும்போது என்னை சந்தித்து நான் பாஜகவிற்கு செல்கிறேன் என்று என்னிடம் கூறிவிட்டு தான் பாஜகவில் இணைந்தார். பாஜகவை அவர் நல்ல முறையில் வழிநடத்துவார் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.