சீன ஊடகக் குழுமமும், குவைத்திற்கான சீனத் தூதரகமும், குவைத்-சீன நட்புறவுச் சங்கமும் கூட்டாக நடத்திய “சீனாவின் ஆட்சிமுறையும் உலகின் வளர்ச்சியும்” எனும் தலைப்பில் உலகளாவிய கலந்துரையாடல் குவைத்தில் நவம்பர் 3ஆம் நாள் நடைபெற்றது. இந்நிகழ்வில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும், சீன ஊடகக் குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங் காணொளி வழியாக உரைநிகழ்த்தினார். அந்நாட்டிற்கான சீனத் தூதர் யாங் சின், குவைத் அரச குடும்பத்தினர்கள் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினர். இதில் இரு நாடுகளின் தொழில் மற்றும் வணிகம், செய்தி ஊடகத் துறை முதலியவற்றைச் சேர்ந்த சுமார் 100 விருந்தினர்கள் பங்கெடுத்தனர். சீனாவின் ஆட்சிமுறை சார்ந்த அனுபவங்கள் உள்ளிட்ட கருப்பொருட்கள் குறித்து அவர்கள் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொண்டனர்.
அப்போது ஷென் ஹைய்சியோங் கூறுகையில், தற்போதைய சீனாவைப் புரிந்துகொள்ள விரும்பினால், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும் என்றார். மேலும், அண்மையில் பெய்ஜிங் மாநகரில் நிறைவடைந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்தியக் கமிட்டியின் 5ஆவது முழு அமர்வு உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், 105 ஆண்டு கால ஒளிமயமான வரலாறுடைய இக்கட்சி, மேலும் உயர் வரையறையின்படி சுயக் கட்டுமானத்தை விரைவுபடுத்தி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சுய ஆட்சியின் மூலம் சீனாவின் ஆட்சிமுறையை மேம்படுத்தும் என்ற முழு அமர்வின் கூற்றையும் விளக்கினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய வரலாற்றுச் செய்திகளைச் சீன ஊடகக் குழுமம் மேலும் நன்றாக விளக்கிக்கூறும் எனக் கூறிய அவர், கூட்டுப் படிப்பு மற்றும் பகிர்வு எனும் உரையாடல் தளங்களை மேலும் விரிவாக்கி, பண்பாட்டுப் பரிமாற்ற ஒத்துழைப்புகளை ஆழமாக்க சீன ஊடகக் குழுமம் முயற்சி செய்யும் என்றும் தெரிவித்தார்.
