இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் 8 முறை சாம்பியனான இந்திய அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை (யுஏஇ) எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகம் அணி முதலில் பேட்டிங் செய்தது.
அந்த அணியில் தொடக்க வீரர்களாக அலிஷான் ஷரபு, முகமது வசீம் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முறையே 22 ரன்கள் மற்றும் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்த நிலையில் 13.1 ஓவர்களில் ஐக்கிய அரபு அமீரகம் அணி 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடி, பவுண்டரி, சிக்சர்களாக விளாசினர். அபிஷேக் ஷர்மா 30 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில் 4.3 ஓவர்களில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. சுப்மன் கில் 20 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.