மிசோரமின் சாய்ரங் நகரில் இருந்து கொல்கத்தா நோக்கிச் சென்ற கொல்கத்தா – சாய்ரங் எக்ஸ்பிரஸ் (Kolkata–Sairang Express) ரயில், அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியின் வெளிப்புறப் பகுதியில் உள்ள திகாரூ (Digaru) ரயில் நிலையம் அருகே அதிகாலையில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயிலின் இன்ஜின் உட்பட 7 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகிச் சென்றுள்ளன. இந்த சம்பவத்தில் சில பயணிகள் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், காயமடைந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை மற்றும் அவர்களின் காயங்களின் தன்மைகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ரயில் தடம்புரண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விரிவான விவரங்களை ரயில்வே அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
**வேகக் கட்டுப்பாடு இழந்ததால் ரயில் விபத்து: வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே அதிகாரி விளக்கம்**
**கவுகாத்தி:**
“புதன்கிழமை காலை 6:54 மணியளவில் வண்டி எண் 13125 கொல்கத்தா – சாய்ரங் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வழிவிடும் (precedence) நோக்கத்திற்காக, அஸ்ஸாம் மாநிலத்தின் திகாரூ ரயில் நிலையத்தில் அது பெறப்பட்டபோது, லோகோ பைலட்டால் (ரயில் ஓட்டுநர்) வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் ரயிலின் இன்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி எதிர்பாராத வகையில் தடம்புரண்டது” என்று வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் (NFR) தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (CPRO) கே.கே. சர்மா தெரிவித்துள்ளார்.
சம்பவம் நடந்த உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன. வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயின் பொது மேலாளர் (GM) மற்றும் மூத்த ரயில்வே அதிகாரிகள் மீட்புப் பணிகளை நேரில் பார்வையிட சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
இந்த ரயில் விபத்தைத் தொடர்ந்து, வண்டி எண் 12067 கவுகாத்தி – ஜோர்ஹாட் டவுன் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் பான்பாரி (Panbari) நிலையத்திலும், வண்டி எண் 15627 கோயம்புத்தூர் – சில்சார் எக்ஸ்பிரஸ் ரயில் பானிகாய்ட்டி (Panikhaiti) நிலையத்திலும் நிறுத்தப்பட்டு (regulated) பயணங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.
