அனைத்து முருகன் கோயில்களுக்கும் அறநிலையத்துறை அதிரடி உத்தரவு!

Estimated read time 1 min read

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் திருவிழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து முக்கிய முருகன் திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கு எவ்வித சிரமமுமின்றி சிறப்பான தரிசனம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் விரிவான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சிரமமில்லாத தரிசனம்

  • கந்த சஷ்டி விழாவின் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் சிரமமின்றி தரிசனம் செய்யத் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
  • பக்தர்கள் வருகைக்கு ஏற்ப கூடுதல் தரிசன வரிசைகள் மற்றும் தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
  • காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்கான தனித்திட்டம் தயாரித்து செயல்படுத்த வேண்டும்.

சிறப்பு முன்னுரிமை தரிசனம்

  • மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் நேரடியாகத் தரிசனம் செய்யத் தனி ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • இவர்களுக்கு உதவுவதற்காக போதிய தன்னார்வலர்கள் மற்றும் கோயில் பணியாளர்களை நியமிக்க வேண்டும்
  • இவர்களின் பாதுகாப்பு மற்றும் வசதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்

குடிநீர் மற்றும் உணவு வசதிகள்

  • கோயில் வளாகம் மற்றும் பக்தர்கள் காத்திருக்கும் பகுதிகளில் சுத்தமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
  • தேவையான இடங்களில் பிஸ்கெட் உள்ளிட்ட சிற்றுண்டிகளை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • மருத்துவ உதவி மையங்கள், முதலுதவி வசதிகள் மற்றும் அவசர மருத்துவ ஊர்திகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்
  • கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகளைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

சூரசம்ஹாரம் அன்று சிறப்பு ஏற்பாடுகள்

  • சூரசம்ஹாரம் நடைபெறும் நாளில் எதிர்பார்க்கப்படும் பக்தர்கள் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு விரிவான கூட்ட நெரிசல் மேலாண்மைத் திட்டம் தயாரிக்க வேண்டும்.
  • காவல் துறை, தீயணைப்புத் துறை, மருத்துவத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
  • நுழைவு மற்றும் வெளியேறும் வழிகளைத் தனித்தனியாக அமைத்து, அவசரகால வெளியேற்றப் பாதைகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • தேவையான இடங்களில் தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள், அறிவிப்புக் கருவிகள் மற்றும் வழிகாட்டும் பலகைகள் அமைக்க வேண்டும்.
  • பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் பாதுகாப்பாக தரிசனம் செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கோயில் பணியாளர்களின் நடத்தை

  • அனைத்து கோயில் பணியாளர்களும் பக்தர்களிடம் மிகுந்த மரியாதையுடனும், பொறுமையுடனும், கனிவுடனும் நடந்து கொள்ள வேண்டும்.
  • எந்தச் சூழ்நிலையிலும் பக்தர்களிடம் கடுமையாகப் பேசுவதோ, முறையற்ற வகையில் நடந்து கொள்வதோ அனுமதிக்கப்படாது.
  • புகார்கள் மற்றும் குறைகளை உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அனைத்து முக்கிய இடங்களிலும் பொறுப்பான அலுவலர்களை நியமிக்க வேண்டும்.

தமிழ் வழிபாடு மற்றும் தமிழ் ஆன்மிக நிகழ்ச்சிகள்

  • அனைத்து முக்கிய முருகன் திருக்கோயில்களிலும் ஓதுவார்களைக் கொண்டு தமிழில் திருப்புகழ் / திருமுறை / கந்த சஷ்டி பாராயணம் நடத்த வேண்டும்.
  • கோயில்களில் நடைபெறும் சொற்பொழிவுகள், ஆன்மிக உரைகள், வர்ணனைகள் மற்றும் இசைக் கச்சேரிகள் அனைத்தும் முருகப்பெருமானின் பெருமைகளையும் தமிழின் சிறப்பையும் போற்றும் வகையில் அமைய வேண்டும்.
  • அனைத்து வழிபாட்டு நிகழ்ச்சிகள், பூஜைகள் மற்றும் விழா நிகழ்வுகளிலும் தமிழுக்கு முதன்மையான இடம் வழங்கப்பட வேண்டும்.
  • கோயில் ஒலிபெருக்கிகளில் திருப்புகழ், தேவாரம், திருமுறை மற்றும் முருக பக்திப் பாடல்களை ஒலிபரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • அறிவிப்புகள், வழிகாட்டிப் பலகைகள் மற்றும் பக்தர்களுக்கான தகவல்கள் அனைத்திலும் தமிழ் மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கந்த சஷ்டி மற்றும் சூரசம்ஹாரம் திருவிழா என்பது முருக பக்தர்களுக்கு மிக முக்கியமான ஆன்மிகத் திருவிழாவாகும். இந்த விழாவில் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வருகை தரும் பக்தர்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமல், பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் தரிசனம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது நமது முக்கியப் பொறுப்பாகும்.

பக்தர்களின் வசதி, பாதுகாப்பு, மரியாதை மற்றும் தமிழ் வழிபாடு ஆகிய நான்கு அம்சங்களிலும் எந்தவிதமான குறைபாடும் இருக்கக் கூடாது. அனைத்து ஏற்பாடுகளும் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புடனும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது தொடர்பாக அனைத்து அலுவலர்களும் தனிப்பட்ட கவனம் செலுத்தி உடனடியாகச் செயல்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் கட்டண தரிசனம் ரத்து

இதனிடையே, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று முதல் நவம்பர் 16-ம் தேதி வரை ரூ.100 கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அனைவரும் இலவசமாக சுவாமி தரிசனம் செய்யவும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author