தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்து 6 மாதங்கள் கடந்த நிலையில், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாகவும், ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகள் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாகவும் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
குறிப்பாக, துறையூர் தவெக எம்.எல்.ஏ-வும், துணை சபாநாயகருமான ரவி சங்கர், கோரிக்கைகளுடன் வந்த நபர் ஒருவரைத் தாக்கியதாகச் சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அதேபோல கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், இதன் காரணமாக ஆட்சியர் வீட்டிற்குப் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த இரட்டை விவகாரங்கள் தமிழக அரசியல் களத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்தத் தொடர் சர்ச்சைகளுக்கு மத்தியில், சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் இன்று கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுக் கூட்டம் அவசரமாகக் கூடுகிறது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கட்சி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் இதில் தவறாமல் கலந்துகொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதுடன், சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ-க்கள் மீது அதிரடி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களிடம் எப்படி நடந்துகொள்வது, கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் வராமல் செயல்படுவது எப்படி என்பது குறித்து விஜய்யும் என்.ஆனந்தும் ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.
