நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன விரைவுச்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் தங்களது கார்களுக்குச் செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது பலருக்கும் பெரும் சுமையாக மாறி வருகிறது.
இந்தச் சூழலில், டெல்லி மற்றும் மீரட் இடையேயான புகழ்பெற்ற விரைவுச்சாலையில் பயணம் செய்யும் போது, கார்களின் பாஸ்ட் டேக் கணக்கிலிருந்து பெருமளவு பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்று கூறி நபர் ஒருவர் வெளியிட்டுள்ள விசித்திரமான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிவரும் தகவல்களின்படி, ஷிவா சர்மா என்ற அந்த நபர் டெல்லி – மீரட் விரைவுச்சாலையில் இயக்கப்படும் கார்களுக்கான கட்டணக் கட்டமைப்பில் உள்ள ஒரு சிறிய தொழில்நுட்ப இடைவெளியைப் பயன்படுத்தி இந்தத் தந்திரத்தைச் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பொதுவாக டெல்லியில் இருந்து மீரட் வரை செல்லும் கார்களுக்கு ஒரு வழிப் பயணத்திற்குச் சுமார் 175 ரூபாய் வரை சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலையில், வாடகைத் கார் ஓட்டுநரான இவர் குறிப்பிட்ட சில இடங்களில் நெடுஞ்சாலையிலிருந்து வெளியேறி மீண்டும் உள்ளே நுழைவதன் மூலம் தனது கட்டணத்தை மிகக் குறைவாகக் குறைத்துவிடுவதாகக் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பாஸ்ட் டேக் கணக்கில் பணம் வெட்டப்படுவதற்கான நேரடி ஆதாரங்களையும் அவர் அந்த வீடியோவில் காட்டியுள்ளார். சமூக வலைதளங்களில் படுவேகமாகப் பரவிவரும் இந்தக் காணொளியைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் இருவேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
சிலர் இது புத்திசாலித்தனமான யோசனை என்று பாராட்டி வந்தாலும், மற்றும் சிலரோ இது போன்ற முறைகளைக் சமூக வலைதளங்களில் பகிர்வது நெடுஞ்சாலை வாரியத்தின் கவனத்திற்குச் சென்றுவிடும் என்றும், விரைவில் அந்தத் தொழில்நுட்ப ஓட்டை அடைக்கப்பட்டுவிடும் என்றும் எச்சரித்துள்ளனர். அதிகரித்து வரும் சுங்கக் கட்டணச் சுமையிலிருந்து தப்பிக்க வாகன ஓட்டிகள் இது போன்ற விசித்திரமான வழிகளைத் தேடத் தொடங்கியுள்ளமை இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
