ஷிம்லா, மணாலியில் கூட்ட நெரிசலில் சிக்க வேண்டாம்…!

Estimated read time 0 min read

குளிர்காலம் வந்துவிட்டாலே பனிப்பொழிவை நேரில் ரசிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். இதற்காகப் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஷிம்லா, மணாலி, குல்லு போன்ற பிரபலமான மலைப் பகுதிகளுக்குச் செல்கின்றனர். ஆனால், சுற்றுலாப் பயணிகள் அதிகமாகக் குவிவதால் முக்கியச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசலும், சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டமும் காணப்படும். இதனால் பயணத்தின் மகிழ்ச்சியே குறைந்துவிடலாம். அமைதியான சூழலில் பனிப்பொழிவை ரசிக்க விரும்புபவர்கள், அதிகம் அறியப்படாத சில இடங்களைத் தேர்வு செய்யலாம்.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள முன்சியாரி அப்படிப்பட்ட ஓர் அழகான இடம். ‘குட்டி காஷ்மீர்’ என்று அழைக்கப்படும் இப்பகுதி, பனிப்பொழிவின்போது கண்கொள்ளாக் காட்சியளிக்கும். இங்கிருந்து பஞ்சசூலி மலைத்தொடரின் அழகையும் ரசிக்கலாம். அடுத்ததாக, இமாசலப் பிரதேசத்தில் உள்ள நார்கண்டா சிறந்த தேர்வாக இருக்கும். ஷிம்லா, மணாலியுடன் ஒப்பிடும்போது இங்கு சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும். குறிப்பாக, ஹாட்டு சிகரத்தில் பனிப்பொழிவைக் கண்டு ரசிக்கலாம்.

அருணாசலப் பிரதேசத்தில் உள்ள தவாங், கிழக்கு இமயமலையின் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கொண்டுள்ளது. பனிப்பொழிவின்போது இப்பகுதி மேலும் அழகாக மாறும். அமைதியான சூழலை விரும்புபவர்களுக்கு இது ஏற்ற இடமாக இருக்கும். இமாசலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள கல்பா கிராமமும் பனிப்பொழிவை ரசிக்க ஏற்ற இடமாகும். இங்கிருந்து கைலாஷ் மலைத்தொடரின் அற்புதமான காட்சிகளைக் காணலாம். மற்ற பிரபலமான சுற்றுலாத் தலங்களுடன் ஒப்பிடும்போது இங்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருக்கும்.

சிக்கிமில் உள்ள யும்தாங் பள்ளத்தாக்கு மற்றும் லாச்சுங் ஆகிய இடங்களும் பனிப்பொழிவை ரசிக்க விரும்புபவர்களின் பட்டியலில் இடம்பெற வேண்டியவை. ‘மலர்களின் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் யும்தாங், குளிர்காலத்தில் பனிப்போர்வை போர்த்தியதுபோல் காட்சியளிக்கும். இங்கு அனுமதிச் சீட்டு பெற்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் அமைதியான சூழலில் இயற்கை அழகை ரசிக்க முடியும். இந்த ஐந்து இடங்களும் இந்தக் குளிர்காலச் சுற்றுலாவுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தரக்கூடும்.

Please follow and like us:

You May Also Like

More From Author