மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய், ரூ.10 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி அருங்காட்சியகத்தையும் முறைப்படி திறந்து வைத்தார்.
அருங்காட்சியகத்தின் பழமை மாறாமல் மேல்தளம் சீரமைக்கப்பட்டுள்ளதுடன், நவீன டிஜிட்டல் திரைகள், புகைப்படங்கள் மற்றும் தமிழாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுப் புதுப்பொலிவு பெற்றுள்ளது.
மதுரை மாவட்டம், ஆழ்வார்புரம், ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகம் சுமார் ரூபாய் 10.25 கோடி செலவில் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு புனரமைக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வரலாறு, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு, காந்தியின் தமிழ்நாட்டு பயணம் உள்ளிட்ட தகவல்களை தொடுதிரை தொழில்நுட்பங்கள் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் புதிய காட்சியமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
