கடந்த 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தின்போது நடைபெற்ற பந்தைச் சேதப்படுத்திய சர்ச்சையின் ஆழமான மன அழுத்தமே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் தனது இரண்டாவது இல்லமாகத் தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவின் ‘சபர்’ எனப்படும் சுயசரிதைப் புத்தகம் வெளியானதைத் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தச் சர்ச்சை குறித்து மீண்டும் விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் கிளார்க் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
அந்தச் சர்ச்சையில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராஃப்ட் ஆகிய மூவர் மட்டுமே தண்டிக்கப்பட்ட நிலையில், அணியில் இருந்த மற்ற வீரர்களுக்கும் இது குறித்துத் தெரிந்திருந்ததா என்ற கேள்வியை கவாஜாவின் புத்தகம் எழுப்பியுள்ளது. இது தொடர்பாக வானொலி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மைக்கேல் கிளார்க், தண்டிக்கப்பட்ட மூன்று வீரர்களும் மிகக் கடுமையான காலக்கட்டத்தைக் கடந்து வந்துள்ளதாகவும், அந்த வடு அவர்களை வாழ்நாள் முழுவதும் பின்தொடரும் என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
MICHAEL CLARKE GOES SCORCHED EARTH
” There are players and support staff shitting their pants ”
Well done, a former captain being more truthful than the players, media and the board in Australia.
#Australia #news #sandpaper #sandpapergate #NewsUpdate #NewsUpdates https://t.co/tZtHF3CDDm
— WARRENTHORNTON.COM (@WARRENTSHOW) November 12, 2026
ஆஸ்திரேலிய ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களிலிருந்து விடுபடவே 37 வயதான ஸ்டீவ் ஸ்மித் தனது மனைவி டேனியுடன் நியூயார்க்கில் குடியேறியுள்ளதாக கிளார்க் சுட்டிக்காட்டியுள்ளார். ஓய்வுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் உள்ள பொது இடங்களுக்கோ அல்லது மதுபானக் கூடங்களுக்கோ செல்லும்போது, யாராவது மது போதையில் பழைய சர்ச்சையைக் குறிப்பிட்டுக் கூச்சலிடுவதை ஸ்மித் விரும்பவில்லை என்றும், எந்தவொரு நாடும் தங்களது வீரர்களை இந்த அளவிற்குக் கடுமையாகத் தண்டித்திருக்காது என்றும் கிளார்க் ஆதங்கப்பட்டுள்ளார்.
புத்தகம் வெளியாவதற்கு முன்பு ஸ்டீவ் ஸ்மித்துடன் தாம் நடத்திய உரையாடல் சற்று சங்கடமாக இருந்ததாக உஸ்மான் கவாஜா கூறியுள்ள நிலையில், டேவிட் வார்னர் மற்றும் தற்போதைய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் இது குறித்துப் பொதுவெளியில் கருத்துத் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கழுத்துப் பகுதி காயத்திற்காக நியூயார்க்கில் சிறப்பு மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த ஸ்டீவ் ஸ்மித், அடுத்த வாரம் சிட்னியில் நடைபெறவுள்ள ஷெஃபீல்ட் ஷீல்ட் உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும், தொடர்ந்து டிசம்பர் 9-ஆம் தேதி பெர்த்தில் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் விளையாடத் தயாராகி வருகிறார்.
