சீனாவில் இளைஞர்கள் மத்தியில் இப்போது வித்தியாசமான வேலை முறை ஒன்று பிரபலமாகி வருகிறது. தினமும் அலுவலகத்துக்குச் சென்று வேலை செய்வது, மேலதிகாரிகளின் உத்தரவுகளைக் கேட்டு நடப்பது என வழக்கமான பணிகளை விட்டுவிட்டு, விமானப் பயணத் துணையாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளனர். இந்த வேலையில் வருமானம் கிடைப்பதுடன், பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைப்பதால் இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்தப் பணியில் இருப்பவர்கள் தனியாக விமானத்தில் பயணம் செய்யச் சிரமப்படும் வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் பிற பயணிகளுக்குத் துணையாகச் செல்கின்றனர். விமான நிலையத்தில் பயணச் சீட்டு சரிபார்ப்பு, குடியேற்றச் சோதனை, சுங்க நடைமுறைகள் உள்ளிட்டவற்றில் உதவுகின்றனர். மேலும், நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குப் பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் பொறுப்பையும் ஏற்கின்றனர்.
இந்தச் சேவைக்கு நல்ல வருமானமும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக முழுநேர விமானப் பயணத் துணையாகப் பணியாற்றி வரும் லியு என்பவர், ஒரு மணி நேரத்துக்கு சுமார் 150 பவுண்டுகள் (200 அமெரிக்க டாலர்கள்) கட்டணமாகப் பெறுகிறார். இதற்கு மேலாகச் சேவைக் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. மூன்று வயதுக் குழந்தைகள் முதல் 80 வயதைக் கடந்த முதியவர்கள் வரை இவர்களின் சேவையைப் பயன்படுத்துகின்றனர். இவரது குழுவினர் செல்லப்பிராணிகளையும் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்தக் குறிப்பிட்ட பணிக்கு குறைந்தபட்சம் 35 வயது இருக்க வேண்டும், பிரிட்டனில் குறைந்தது மூன்று ஆண்டுகள் வசித்திருக்க வேண்டும், பயணத்தின்போது பிரிட்டிஷ் பாணியிலான உடை அணிய வேண்டும் போன்ற நிபந்தனைகளும் உள்ளன.
வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளிடம் செல்ல முடியாமல் தவிக்கும் பெற்றோர்களுக்கு இந்தச் சேவை உதவியாக இருக்கிறது. அதேபோல், வணிகர்கள் முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை விரைவாக அனுப்பவும் இவர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த வேலையில் சவால்களும் அதிகம். பல்வேறு நாடுகளின் நுழைவு இசைவு விதிகள், வெளிநாட்டு மொழிகள், விமான நிலைய நடைமுறைகள் ஆகியவற்றைத் தெரிந்திருக்க வேண்டும். விமானங்கள் ரத்து செய்யப்பட்டாலோ, பயண நேரம் மாறினாலோ கூடுதல் செலவுகளையும் சந்திக்க நேரிடும். முறையான சோதனையின்றி மற்றவர்களின் பொருட்களை எடுத்துச் சென்றால் சட்டச் சிக்கலும் ஏற்படலாம். தொடர்ந்து விமானப் பயணம் செய்வதால் உடல் சோர்வு, நேர மண்டல மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் போன்ற பிரச்சினைகளும் உண்டாகும்.
