சிக்கிம் மாநில முதல்வரும் SKM கட்சி தலைவருமான பிரேம் சிங் தமாங்கின் தாயார் தன்மயா தமாங் (87), சிலிகுரியில் உள்ள மருத்துவமனையில் இன்று (நவ.25) காலமானார்.
சிக்கிம் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங்கின் தாயார் தன் மாயா தமாங், நீண்டகால உடல்நலக் குறைவால் நவம்பர் 25-ஆம் தேதி காலமானார். இவரது கணவர் காலு சிங் தமாங் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சோரெங் மாவட்டத்தில் உள்ள சிங்லிங் கிராமத்தில் இந்தத் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் முதலமைச்சர் பிரேம் சிங் தமாங்.
முதலமைச்சர் பிரேம் சிங் தமாங் பொதுமேடைகளில் தனது தாயாரைப் பற்றியும், தாய்மார்கள் செய்யும் தியாகங்கள் குறித்தும் அடிக்கடி நெகிழ்ச்சியுடன் பேசி வந்துள்ளார். சிக்கிம் மாநிலம் முழுவதும் உள்ள தாய்மார்களைக் கௌரவிக்கும் விதமாக, கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதியை ‘ஆமா சம்மான் திவாஸ்’ (அன்னையர் கௌரவ தினம்) ஆக அவர் அறிவித்தார்.
தாய்மார்கள் மீதான அவரது அக்கறையைப் பிரதிபலிக்கும் வகையில், அவரது அரசின் முதன்மைத் திட்டமான ‘ஆமா சஷக்திகரன் யோஜனா’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 18 முதல் 59 வயதுக்குட்பட்ட வேலைக்குச் செல்லாத, திருமணமாகாத, கணவனை இழந்த, விவாகரத்தான மற்றும் கணவனால் கைவிடப்பட்ட தகுதியுள்ள தாய்மார்களுக்கு ஆண்டுதோறும் ரூ.40,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. தற்போது சுமார் 32,000 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் நிலையில், 2027-ஆம் ஆண்டு முதல் பயனாளிகளின் எண்ணிக்கை 50,000 ஆக உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் இத்திட்டத்திற்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு ரூ.200 கோடியாக அதிகரிக்கவுள்ளது.
மேலும், இரண்டாவது ஆமா சம்மான் திவாஸ் விழாவில், மாநிலத்தின் 32 சட்டமன்றத் தொகுதிகளிலிருந்தும் தலா ஒரு தாயாரைத் தேர்ந்தெடுத்து ரூ.51,000 வழங்கும் ‘ஆமா சம்மான் புரஸ்கார்’ விருதையும், அரசின் நிதியுதவியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திய மூன்று தாய்மார்களுக்கு வழங்கப்படும் ‘பிரகதிஷீல் ஆமா புரஸ்கார்’ விருதையும் முதலமைச்சர் அறிவித்திருந்தார். முன்னதாக, 2024 ஜூலை மாதம் நடைபெற்ற சுற்றுச்சூழல் திருவிழாவில் (பரியாவரன் பர்வா), ‘தாயின் பெயரில் ஒரு மரம்’ (ஏக் பேட் மா கே நாம்) பிரச்சாரத்தின் கீழ் முதலமைச்சரும் அவரது தாயாரும் இணைந்து மரக்கன்று நட்டது நினைவுகூரத்தக்கது.
