டெல்லி : வரும் நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரை முன்னிட்டு, தொகுதி மறுவரையறை மசோதாவை (Delimitation Bill) அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துக் கட்சிகளும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (Cockroach Janta Party) அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தேசமும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள கரப்பான்பூச்சி ஜனதா கட்சி, இந்த மசோதாவிற்குத் துணைபோகும் எந்தவொரு கட்சியும் அல்லது அரசியல்வாதியும் மக்கள் தீர்ப்புக்குப் பெரும் துரோகம் இழைத்தவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும், அந்தத் துரோகம் இம்முறை மன்னிக்கப்படாது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மசோதாவை ஆதரிப்பவர்கள், இதன் மிக மோசமான விளைவுகளை மறைத்து மக்களைத் திசைதிருப்புவதாக அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக, ஆளுங்கட்சிக்குச் சாதகமாக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை ஒருதலைப்பட்சமாக மாற்றியமைக்கும் ‘ஜெர்ரிமாண்டரிங்’ (Gerrymandering) நடைமுறை இதில் அடங்கியுள்ளதாக அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. வாக்குச்சாவடி வாரியான முடிவுகள், வாக்காளர் பட்டியல் மற்றும் கடந்தகால வாக்களிப்பு முறைகள் ஆகியவற்றின் தரவுகளைக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குத் திட்டமிட்டுச் சாதகமாக அமையும் வகையில் தொகுதி எல்லைகளை வரையறுக்க முடியும் என அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது. சில தொகுதிகளில் குறிப்பிட்ட வாக்காளர்களை ஒருங்கிணைப்பதன் மூலமும், மற்ற தொகுதிகளில் அவர்களைப் பிரிப்பதன் மூலமும், ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லாமலேயே தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளும், சுயாதீனமான ஆய்வும் இல்லாமல் தொகுதி எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டால், அது பாரதிய ஜனதா கட்சிக்கு (பாஜக) நீண்டகாலத் தேர்தல் ஆதாயத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படக்கூடும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
இத்தகைய நடவடிக்கை அடுத்த பொதுத் தேர்தலோடு முடிந்துவிடாமல், பல தசாப்தங்களுக்கு நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தீர்மானிக்கும் வல்லமை கொண்டது என்று அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. ஆளும் அரசுக்குச் சாதகமாகத் தொகுதி எல்லைகள் வடிவமைக்கப்பட்டால், மக்களின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்கள் நாடாளுமன்றத்தின் கட்டமைப்பில் நியாயமாகப் பிரதிபலிக்காத சூழல் உருவாகும் என்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளது.
