Web team
கற்க கசடற!
கவிஞர் இரா. இரவி.
******
கற்க கசடற திருவள்ளுவர் மொழிந்தார்
குற்றமின்றி கல்வி கற்றால் சிறக்கலாம் !
சென்ற இடமெல்லாம் சிறப்பு உண்டு
சீராகவே கல்விதனை கற்றுவிட்டால் !
மேன்மக்கள் என்ற மரியாதை கற்றோருக்கு
மேதினியில் என்றும் உண்டு அறிந்திடுக!
பிச்சை எடுத்தேனும் படித்துவிடு என்று
பழைய இலக்கியத்திலும் சொல்லி வைத்தனர்!
வாரிசுகளுக்கு சொத்துக்கள் வைக்கா விட்டாலும்
வளமான கல்வியை வழங்கினால் போதும்!
ஆசிரியர் குற்றம் நீக்கும் குணத்தோர்
ஆழ்ந்து கவனித்தால் பண்பும் வளர்ந்திடும்!
கல்வியைக் கற்றுவிட்டால் உலகில் எங்கும்
கனிவோடும் பண்போடும் நன்றாக வாழலாம்!
அறிவுக்கண்ணைத் திறந்து வைப்பது கல்வி
அறிவில் வளர்ச்சியை விதைப்பது கல்வி!
வாழ்வாங்கு வழிவகுத்திடும் குற்றமற்ற கல்வி
வையகத்தில் சிறந்து விளங்கிட வைத்திடும்!
கற்றோர் மிக்க அவையில் உரையாற்றிட
கற்ற கல்வி தானே வந்து துணைநிற்கும்!
வேண்டா வெறுப்பாகப் பயில்வது தவறு
வேண்டு விரும்பிப் பயில்வது நன்று!
கற்றதோடு நின்றுவிடாமல் கற்றபடி வாழ்ந்திட
கற்றுக் கொடுக்கும் உலகில் சிறந்த கல்வி!