திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள முடிவை விமர்சித்துள்ள பாஜக செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, இந்தத் துரோகத்தை மறைந்த கேப்டன் விஜயகாந்தின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது என்று தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த், தனது வாழ்நாளில் ஒருபோதும் அண்ணா அறிவாலயத்தின் வாசலை மிதிக்காதவர். ஆனால், தற்போது யாராவது அழைக்க மாட்டார்களா என்று காத்திருந்து, வேறு வழியின்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திமுகவுடன் கைகோர்த்துள்ளார். கேப்டனின் கொள்கைகளுக்கு மாறாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அவரது ஆன்மா மன்னிக்காது.
இந்தத் தேர்தலில் தங்களால் வெற்றி பெற முடியாது என்பது திமுகவிற்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. அதனால் தான், யார் வந்தாலும் அவர்களைச் சேர்த்துக்கொண்டு எப்படியாவது கரையேறிவிடலாம் எனத் தவிப்புடன் முயற்சிக்கிறது. ஆனால், மக்கள் இந்த முறை மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். அதிமுக – பாஜக கூட்டணியின் பலமான அலையில் சிக்கி திமுக காணாமல் போகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அங்கிருந்து வெளியேறிவிடுமோ என்ற அச்சத்தில்தான், முன்னெச்சரிக்கையாக தேமுதிகவை திமுக இழுத்துள்ளது. காங்கிரசுக்குச் சுயமரியாதை இருந்திருந்தால் திமுக கூட்டணியை விட்டு எப்போதோ வெளியேறி இருக்க வேண்டும். ஆனால் அவர்களுக்கு அது கிடையாது.
பெருமதிப்பிற்குரிய காமராஜர் காலத்திற்குப் பிறகு, மத்தியில் ஆட்சியில் இருந்த காலத்தில்கூட காங்கிரஸ் கட்சி தனித்து நிற்க முயற்சி எடுத்ததே இல்லை. தேய்ந்து போய்விட்ட அந்த கட்சி இனி எந்தக் காலத்திலும் கரைசேரப் போவதில்லை என்று கூறினார்.
