பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருகோவிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். குறிப்பாக விசேஷ நாட்களில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட’அதிகமாகவே இருக்கும். அப்போதைய காலகட்டங்களில் பக்தர்களின் வசதிக்காக ஆன்லைனில் தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும். அந்த வகையில் தற்போது அக்டோபர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் தேதியை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற 18-ஆம் தேதி காலை 10 மணி முதல் 20ஆம் தேதி காலை 10 மணி வரை சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம்.
இதைத்தொடர்ந்து அன்று மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இதையடுத்து கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம் போன்ற அலங்கார சேவைகளுக்கான டிக்கெட் ஜூலை 22ஆம் தேதி காலை 10 மணி முதல் ஆன்லைனில் வெளியிடப்படும். மேலும் பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் 23ஆம் தேதி வெளியிடப்படும். VIP டிக்கெட்டுகள் 23ஆம் தேதி காலை 11 மணி முதல் வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். இதையடுத்து மாற்றுத்திறனாளிக்கான டிக்கெட்டுகள் வருகிற 23ஆம் தேதி மாலை 3 மணிக்கும், சிறப்பு கட்டண தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் வருகிற 24-ஆம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவுக்கான டிக்கெட் வருகிற 24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் எனவுதெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் தேவஸ்தானத்திற்கு உரிய இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.