மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இந்த சம்பவத்தின் தாக்கம் இன்னும் அடங்காத நிலையில் மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் புதிய திட்டத்தை தமிழக சுகாதாரத்துறை அதிரடியாக அமல்படுத்தியுள்ளது. அதாவது அனைத்து மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு பார்வையாளர்களுக்கு அடையாள அட்டை கொடுத்து குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும், மருத்துவமனைகளை சுற்றிலும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை மையம், பாதுகாப்பு மற்றும் ஆலோசனை கமிட்டிகளை உருவாக்கும் வகையிலும் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் அதன் எதிரொலியாக தற்போது தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.