Web team
.கொஞ்சல் வழிக் கல்வி !
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் . thabushankar@yahoo.com
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விஜயா பதிப்பகம் .20 ராஜ வீதி கோவை .விலை ரூபாய் 70.
தொலைபேசி ; 2394614.
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்கள் காதல் கவிதைகள் எழுதியே புகழ் அடைந்து விட்டார் .இவருடைய நூல் என்றால் விஜயா பதிப்பகத்தாரும் தனி கவனம் செலுத்தி, கட்டி அட்டை ,அழகிகளின் புகைப்படங்கள் ,உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .நூலை பார்த்தாலே வாங்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டும் வண்ணம் வடிவமைப்பு .காதலர்கள் நேசிப்பது காதல் .காதலர்கள் பரிசளிப்பது தபூ சங்கர் நூல்கள் .இப்போதெல்லாம் காதலர்கள் காதலிக்கு காதல் கடிதம் தருவதில்லை .தபூ சங்கர் நூலையே காதல் கடிதமாகத் தருகிறார்கள் .அந்த அளவிற்கு புகழ் பெற்று விட்டது .இந்த நூல் குறுகிய நாட்களில் நான்கு பதிப்புகள் வந்து விட்டன . ‘ அஞ்சல் வழிக் கல்வி ‘ என்று எல்லோராலும் அறியப்பட்ட சொல்லில் முதல் எழுத்தான அ எடுத்து விட்டு கொ என்று எழுதி ‘கொஞ்சல் வழிக் கல்வி’என்று வித்தியாசமாக எழுதி வெற்றி பெறுகின்றார்
.
திரைப்படத்திற்கு ஆங்கிலச்சொல் கலப்பின்றி தமிழில்தான் எழுதுவேன் என்ற கொள்கையில் உறுதியோடு பாடல்கள் எழுதி வரும் இனிய கவிஞர் அறிவுமதி அவர்களின் அணிந்துரை மிக நன்று .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் காதலை மட்டும் எழுதுவதோடு நின்று விடாமல் பொது அறிவு வளர்க்கும் விதமாக பல தகவல்களும் கவிதைகளில் தந்துள்ளார் .நூலில் உள்ள எல்லாக் கவிதைகளிலும் காதல் ரசம் வழிந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !
மீன்கொத்திப் பறவை
தான் சாப்பிட்ட மீன்களின்
முட்களைக் கொண்டே
கூடு கட்டிக் கொள்கிறது !
மனங்கொத்திப் பறவை
நீயோ
முதலில் என் இதயத்தில்
கூடு கட்டிக் குடியேறிவிட்டு
பிறகு என் இதயத்தையே
சாப்பிடுகிறாய் !
மீன் கொத்திப் பறவை மீன் முட்களால் கூடு கட்டும் என்ற தகவலை மிக லாவகமாகக் கவிதையில் பதிவு செய்துள்ளார் .
இந்தியாவில் ஆளுநர் ஆவதற்கு
35 வயத்க்கு மேல்
ஆகியிருக்க வேண்டும் !
நீ மட்டும்
22 வயதிலேயே
என்னை ஆளுகிறாயே !
காதலி காதலனை ஆளுகிறாள் என்பதை ஆளுநர் பதவிக்கான வயதைச் சொல்லி உணர்த்தும் உத்தி மிக நன்று .
ஞானம் பெறுவதற்கு முன் புத்தர்
பொதி மரத்தின் கீழ்
49 நாட்கள் அமர்ந்திருந்தார் !
ஆனால்
உன் நிழலின் கீழ்
ஒரே ஒரு நொடி நின்று
ஞானமாகப் பெற்றவன் நான் !
நூலின் தலைப்பில் உள்ள கவிதையும் ஒரு தகவலைத் தருகின்றது .பாருங்கள் .
அஞ்சல் வழிக் கல்வியை
முதலில் தொடங்கியது
டெல்லி பல்கலைக் கழகம் !
கொஞ்சல் வழிக் கல்வியைத்
தொடங்கியது நீ !
காதலியிடம் காதலைச் சொல்வதில் உள்ள பயத்தை மிக வித்தியாசமாக உணர்த்துகின்றார் .அதிலும் ஒரு தகவல் உள்ளது .
பெண்களைவிட ஆண்களுக்கு
இருமடங்கு வியர்க்கிறது !
ஆமாம் ஆமாம்
உன்னிடம் காதலைச் சொல்வதற்குள்
என்னைச் சுற்றி
ஒரு வியர்வை நதியே
ஓட ஆரம்பித்துவிட்டதே !
காதல் கவிதை என்றால் முத்தம் பற்றிய கவிதை இடம் பிடித்து விடும் .நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் கவிதை எழுதும் பொது பேனா மையிக்குப் பதிலாக காதல் மை தொட்டு எழுதுவார் போல .முத்தம் வேண்டும் என்று ஒரு கவிதை .
அந்தக்காலத்தில் தன் வீரர்களுக்கு
சம்பளத்தில் பாதியை
உப்பாகக் கொடுத்திருக்கிறது
ரோமாபுரி !
நீ உன் காதலில் பாதியை
எனக்கு முத்தமாகக்
கொடுத்து விடு !
விவிலியத்தில் பயப்படாதே என்ற சொல் 365 இடங்களில் வருகிறது என்பதை அறிந்து அதையும் ஒரு தகவலாக கவிதையில் எழுதி உள்ளார் .
பயப்படாதே என்ற சொல்
பைபிளில் 365 இடங்களில் வருகிறது !
ஆனால் பைபிள் யாரையும் பயமுறுத்தவில்லை !
நீயோ எப்போதும் என்னை
உன் அழகால்
பயமுறுத்திக் கொண்டே இருக்கிறாய் !
ஆனால் உன் மேனியில் ஒரு இடத்தில கூட
இறைவன் எழுதவே இல்லை
பயப்படாதே என்று !
அறிவியலோடு எள்ளல் சுவையுடன் காதலை ஒப்பிட்டு எழுதி உள்ளார் .மிக நன்று .
உணவில் அதிகம் மீன் சேர்த்துக் கொண்டால்
அது நோயகளிலிருந்து
நம் இதயத்தைக் காக்குமாம் !
நல்ல வேடிக்கை !
என் இதயத்தை அதிகம் தாக்குவதே
கண்கள் என்கிற பெயரில்
நீ வைத்திருக்கும் மீன்கள்தான் !
நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் அவர்களுக்கு பாராட்டுக்கள் .கவிதைகளில் பொது அறிவுத் தகவல் எழுதும் உத்தியை இனி எல்லோரும் கடைபிடிக்கலாம் .மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ள விஜயா பதிப்பகத்திற்க்கும் பாராட்டுக்கள்
—
.