விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் நடந்த சோகமான சம்பவத்தில், ஐந்து வயது சிறுமி சம்யுக்தா மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது தந்தை மணி கார்த்திக், இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் சமையலராக பணிபுரிந்து வருகிறார். இன்று காலை, சம்யுக்தா தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, மின்சார கம்பத்தை பிடித்தபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, குழந்தையை சாத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் குழந்தை வழியிலேயே உயிரிழந்ததாக அறிவித்தனர். இதனால் சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பகுதி மக்கள் பெரும் துயரத்தில் மூழ்கினர்.
பகுதி மக்கள் மின்சார ஊழியர்களின் அலட்சியத்தை குற்றம் சாட்டினர். விபத்து ஏற்பட்ட மின்சார கம்பத்தில் பழுது ஏற்பட்டு, ஷாக் அடிப்பதாக பலமுறை புகார் தெரிவித்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், இருக்கன்குடி போலீசார் விசாரணை நடத்தி, குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.