பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியது, ஹோட்டல் அருகில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்தார். முன்னதாக பெண் காவலர்கள் குறித்து அவதூராக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் பெற்றிருந்த நிலையில், குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டது. ஓரிரு நாட்களில் விடுதலையாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்தது. தன் மீதான குண்டர் சட்டத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்த பிறகு மீண்டும் இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது தொடர்பான ஆலோசனை குழுவை ஏற்க மறுத்தது. இதனை அடுத்து சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. பின்னர் சவுக்கு சங்கர் மீது வேறு எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என்பதாலும், ஏற்கனவே இருந்த வழக்குகளிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்திருந்தது என்பதாலும் அண்மையில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
அதன் பிறகு தொடர்ந்து பல்வேறு youtube சேனல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மீண்டும் பேட்டியளித்து வந்தார். இந்நிலையில் இன்று திடீரென சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.