சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் உடைக்கப்பட்ட 26 இடங்களிலும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மெட்ரோ நிர்வாகம் எடுத்து வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ஜுனன் தெரிவித்துள்ளதாவது: “வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மெட்ரோ 3 விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பருவமழை காலத்தில் எவ்வளவு மழை பெய்தாலும் மெட்ரோ ரயில் சேவை தொடர்ந்து இயங்கும். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் 26 இடங்களில் மெட்ரோ பணிகளுக்காக வடிகால்களை உடைத்துள்ளோம். மழை நீர் வடிகால் உடைக்கப்பட்ட 26 இடங்களிலும் சென்னை மாநகராட்சி அமைத்த வல்லுனர் குழுவுடன் இணைந்து மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களுக்கு தேவையான நீர் இறைக்கும் மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளது.
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளில் 19 இடங்களில் சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மழைநீர் சுரங்கத்திற்கு செல்லாதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒக்கியம் மடுவு மற்றும் ஆதம்பாக்கம் ஏரியில் நீர்வளத்துறை பரிந்துரைப்படி சென்னை மெட்ரோ நிர்வாகம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் ஒக்கியம் மடுவில் தண்ணீர் செல்வதில் சிக்கல் இருந்தது. தற்போது ஒக்கியம் மடுவு 80 மீட்டர் அகலம் உள்ள நிலையில் 200 மீட்டராக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. 200 மீட்டராக அகலப்படுத்தும் பணிகள் வட கிழக்கு பருவமழை காலத்திற்கு முடியாது.
ஆனால் ஒக்கியம் மடுவில் 5 நீர்வழித் தடங்கள் முழுமவதும் தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்பட்டுள்ளதால் கடந்த ஆண்டை இந்த ஆண்டு அதிக அளவு தண்ணீர் தேங்காது. அடுத்தா ஆண்டில் ஒக்கியம் மடுவு 200 மீட்டராக அகலப்படுத்து பணிகள் முடிந்த பின் பள்ளிக்கரணை, செம்மஞ்சேரு பகுதிகளில் எவ்வளவு மழை, தற்போது பெய்தாலும் ஒக்கியம் மடுவு தாங்கும். இதேபோல் ஆதம்பாக்கம் ஏரியிலும் தண்ணீர் செல்லும் பாதைகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து விதத்திலும் தயார் நிலையில் சென்னை நிர்வாகம் உள்ளது.” என்று தெரிவித்தார்.