இந்திய அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி. இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியாவை ஒயிட்வாஷ் செய்துள்ளது நியூசிலாந்து.
நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்தது.
இதன் காரணமாக முதல் இன்னிங்ஸில் 28 ரன்கள் முன்னிலை பெற்றது இந்திய அணி.இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2வது நாள் ஆட்டம் நேர முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. இன்று தொடர்ந்த 3வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் இந்திய அணியின் வெற்றிக்கு 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்தின் சுழல் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். ரோஹித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், சர்ஃபராஸ் கான், ஜெய்ஸ்வால் என்று அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி வெறும் 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.ஒரு பக்கம் ரிஷப் பண்ட் பவுண்டரிகளாக அடித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்த, மறுபுறம் உள்ள பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழந்து கொண்டே இருந்தனர். சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 48 பந்துகளில் அரைசதத்தை அடித்து 64 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 121 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்தின் 3 – 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.