தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை, தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில், இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? என்பதற்கான விவரத்தை இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து அறிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையும். காற்றழுத்த தாழ்வுபகுதி மெதுவாக நகர்வதால் மேகக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இதன் காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுகுறைந்த பின் படிப்படியாக மழை குறையும்.
வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை இயல்பை விட 16% அதிகம்; வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1 முதல் இன்று வரை 47 செ.மீ. பதிவாகியுள்ளது. இன்று, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை தென்தமிழக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை தென் தமிழ்நாடு, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களிலும், டிசம்பர் 17ம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு அதைப்போல, மற்றோரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வரும் 15ஆம் தேதி அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது எனவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.