முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருவர்.
தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து முருகப் பெருமானை வழிபடுவர்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, காலை 7.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரியும், 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.
தைப்பூச திருவிழாவையொட்டி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்து திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும், ஏராளமானவர்கள் பல்வேறு வாகனங்களிலும் கோவிலுக்கு திரண்டு வருகிறார்கள்.
தைப்பூசத்தையொட்டி, அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப் பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். காணும் இடமெல்லாம் பக்தர்கள் கூட்டமாகவே காட்சியளிப்பதால், திருச்செந்தூர் விழாக்கோலம் பூண்டுள்ளது.