இந்த மாத இறுதியில் மதுரையில் நடைபெறவுள்ள கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அதன்படி, அந்த வைபவத்தின் போது உயர் அழுத்த மோட்டார் மூலம் தண்ணீர் பீய்ச்சியடிப்பதற்கு உயர் நீதிமன்றக்கிளை தடை விதித்துள்ளது.
மேலும்,”பாரம்பரிய முறைப்படி தோலால் செய்யப்பட்ட பைகளிலிருந்து மட்டும் தண்ணீரை பீய்ச்சி அடிக்க வேண்டும். அவ்வாறு தண்ணீரை பீய்ச்சி அடிப்பவர்கள் முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும்”எனவும் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக சிலர் தோல் பைக்கு மாற்றாக மோட்டார் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதால், கள்ளழகர் சிலை, தங்கக்குதிரை, சுவாமியின் ஆபரணங்கள் ஆகியவை சேதமடைவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதோடு, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மீதும் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாக வழக்கு தொடரப்பட்டது.